கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் வெற்றி நடித்து வெளிவந்த திரைப்படம் 8 தோட்டாக்கள். சூரரைப்போற்று திரைப்படத்தின் கதாநாயகி அபர்ணா முரளி முதல் முதலில் நடித்த தமிழ் படமான 8 தோட்டாக்கள் திரைப்படத்தில் எம்எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த 8 தோட்டாக்கள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து நடிகர் வெற்றி நடித்த திரைப்படம் ஜீவி. விஜே.கோபிநாத் இயக்கத்தில் நடிகர் கருணாகரன், மைம் கோபி மற்றும் நடிகை ரோகிணி உள்ளிட்டோர் நடித்து  த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த ஜீவி திரைப்படமும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பையும்  கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் வெற்றியின் அடுத்த த்ரில்லர் திரைப்படமாக தற்போது மெமரீஸ் திரைப்படம் தயாராகியுள்ளது.

நடிகர் வெற்றி கதாநாயகனாக நடிக்கும் மெமரிஸ்  திரைப்படத்தை ஷிஜுதமீன் ஃபிலிம்  ஃபேக்டரி தயாரிக்கிறது. இயக்குனர் ஷயாம் பிரவின் இயக்கும் இத்திரைப்படத்திற்கு ARMO &  கிரன் நுப்பிட்டால் ஒளிப்பதிவு செய்ய  இசையமைப்பாளர் கவாஸ்கர் அபினாஷ் இசையமைக்கிறார். மெமரீஸ் திரைப்படத்தின் வசனங்களை அஜயன்பாலா எழுதியுள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதில் இத்திரைப்படத்தின் ஆடியோ உரிமைகளை லஹரி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டதோடு விரைவில் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெற்றியின் திரைப்பயணத்தில் அடுத்தது மெமரி வீசும் சிறந்த த்ரில்லர் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.