நேற்று (செப் 9) காலை 10 மணிக்கு, திமுகவின் பொதுக்குழு கூட்டம் துவங்கியது. கொரோனா அச்சம் காரணமாக, அனைவரும் நேரடியாக ஒரே இடத்தில் கூட முடியாத நிலை இருந்துவந்தது. ஆகையால் இந்தக் கூட்டத்தை காணொலி வாயிலாக அக்கட்சியினர் நடத்தினர்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பேர் பங்கேற்றனர். பொதுக்குழுவில் மாவட்டச் செயலாளா் தலைமையில் அந்தந்த மாவட்டத்தின் ஒன்றிய, நகர, பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனர்.

திமுகவின் வரலாற்றில் மட்டுமல்லாது இந்திய அரசியல் வரலாற்றில் எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு 3,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டத்தை காணொலி வாயிலாக இணைத்திருக்கிறது தி.மு.க.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இருந்துதான், கூட்டம் விரிவுப்படுத்தப்பட்டிருந்தது. கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில், கூட்டத்தில் நேரடியாக கலந்துக் கொண்ட அனைவருக்கும் விதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி சானிடைசரால் கையை சுத்தமாக்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், மாஸ்க் அணிந்துகொண்டு சமூக இடைவெளியுடன் அனைவரும் கலந்துகொண்டனர். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட அமைப்பு சார்பிலும் ஒவ்வொரு அரங்கத்தில் பொதுக்குழு நடந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் அறிவாலாயத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கடந்த மார்ச் 29 ஆம் தேதியே நடைபெற்றிருக்க வேண்டிய பொதுக்குழுக் கூட்டம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
 
ஊரடங்கு செப்டம்பர் 1 முதல் பல தளர்வுகளுக்கு உட்பட்டு விதிக்கப்பட்டாலும், ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு சாத்தியம் இல்லை என்ற நிலையே இருந்தது. ஆனால் திமுக தலைமை, திமுகவின் ஐடி விங்,. ஐபேக் நிறுவனம் ஆகியவை ஒருங்கிணைந்து திட்டமிட்டு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட திமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தைக் காணொலி வாயிலாக நடத்தியுள்ளன. கொரோனா தாக்கம் என்பது உலகளாவிய அளவில் அனைவரையும் பாதித்துள்ளது. இந்நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, உலக அரசியல் வரலாற்றிலேயே எந்தக் கட்சியும் நடத்தாத பிரம்மாண்டக் கூட்டத்தை காணொலியில் நடத்தியிருக்கிறது திமுக.

இந்திய அரசியல் நோக்கர்கள் மட்டுமல்லாமல் உலக அரசியல் நோக்கர்கள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் மத்தியில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நம் நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு திமுக நடத்திய பொதுக்குழுக் கூட்டம் பற்றி அறிந்து தனது ஆச்சரியத்தை தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கடமையையும், தொழில் நுட்பத் திறமையையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டுள்ள திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் பற்றி தனது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார் வெங்கையா நாயுடு என்கிறார்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தில்.

திமுக சார்பில் பேசிய, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி, கொரோனா காலத்தில் களத்தில் இறங்காமலேயே பணியாற்ற ஜூம் செயலி உதவியதாகவும், சில மாதங்களாக ஜூம் செயலியை தான் பயன்படுத்தி அதன் மூலம் களநிலவரத்தை தெரிந்துக் கொள்வதாகவும் இன்று தெரிவித்தார். மேலும், தான் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசியதன் மூலம், இதுவரை அவர் 250-க்கும் மேற்பட்ட ஜூம் மீட்டிங்குகளில் பேசியுள்ளார் என்பதை அறிந்துக் கொண்டதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். ஜூம் செயலி கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராயல்டி வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். இந்தக் கருத்து, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.