ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்! கண்ணா.. ஒரே நேரத்தில் 2 லட்டா!?
By Aruvi | Galatta | Jul 11, 2020, 11:22 am
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்யாணத்திற்கு ஊர்ல ஒரு பொண்ணு கூட கிடைக்காம அவன் அவன் திண்டாடிக்கிட்டு இருக்கான். இங்க என்னடானா, ஒருத்தனுக்கு 2 பொண்ணு. அதுவும், ஒரே மேடையில் 2 பொண்ண உட்கார வச்சு கல்யாணம் பண்றான். நல்லா இருடா டேய்.. நல்லா இருடா. நான் அழுதுகிட்டெல்லாம் சொல்லல.. அடி வயிற்றிலிருந்து சொல்றேன்.. நல்லா இருடா ராஜா.. நல்லா இரு!” என்று எங்கேயோ கேட்ட பார்த்த காமெடி தான் ஞாபகத்துக்கு வருது. அது போன்ற கல்யாணம் தான், தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்து, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் பெத்துல் மாவட்டத்தில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோடடோங்ரி அடுத்து உள்ள கெரியா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் உய்கே, போபாலில் தங்கிப் படிக்கும் போது அங்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் நீண்ட காலமாகக் காதலித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகனின் காதல் விவகாரம், அவரது பெற்றோருக்குத் தெரியாத நிலையில், சந்தீப்புக்கு அவர் வீட்டில் திருமணத்திற்குப் பெண் பார்த்து உள்ளனர். அதன்படி, திருமணத்திற்குப் பெண் பார்க்கப் பட்ட நிலையில், திருமணத்திற்கான தேதியும் முடிவு செய்யப்பட்டது.
அந்த நேரத்தில், தன் காதல் விசயத்தை சந்தீப் உய்கே தன் வீட்டில் கூறி உள்ளார். ஆனால், அதற்கு அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். அத்துடன், தாங்கள் பார்த்த பெண்ணுடன் தான் திருமணம் என்றும், அவர்கள் உறுதிப் பட சந்தீப் உய்கேவிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால், வேறு வழியில்லாமல் தன் காதலை கை விட அவர் முடிவெடுத்து, தன் காதலியை அழைத்து அவர் கூறி உள்ளார். ஆனால், காதலை மறக்க, சந்தீப் உய்கேவின் காதலி ஏற்றுக்கொள்ள வில்லை. இதன் காரணமாக, சந்தீப் உய்கே பெரும் சிக்கலில் மாட்டித் தவித்தார்.
என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வந்த சந்தீப் உய்கே, கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, தன் பிரச்சனைக்கு முடிவு கிடைக்காத நிலையில், சந்தீப் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிர்பிழைத்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, இந்த விசயம் அந்த ஊர் பஞ்சாயத்து வரை சென்றுள்ளது. அந்த பஞ்சாயத்தில் சந்தீப் குடும்பம், அவர் காதலித்து வந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும், சந்தீப் வீட்டில் பெண் பார்த்து நிச்சயம் செய்யப்பட்ட குடும்பம் என்று 3 பேரின் குடும்பமும் ஆஜர் ஆனார்கள். அப்போது, சந்தீப் காதலியின் குடும்பம் மற்றும் சந்தீப் பெற்றோர் பார்த்த பெண்ணின் குடும்பத்துடன் பஞ்சாயத்தார் சமரசம் பேசி முயன்றனர். ஆனால், அவர்கள் 2 பேரின் குடும்பமும், விடப்பிடியாக இருந்துள்ளனர்.
சந்தீப்பை திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்த 2 இளம் பெண்களில் ஒருவர் ஹோஷங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு இளம் பெண் கோலாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட அந்த 2 இளம் பெண்களும், சந்தீப்புடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததுடன், திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழவும் அந்த 2 பெண்களும் ஒப்புக் கொண்டனர்.
2 பெண்களையும் திருமணம் செய்துகொள்ள சந்தீப்பும், அவரது குடும்பத்தினரும் ஒப்புதல் தெரிவித்தனர். அதாவது, இந்த திருமணம் குறித்து 3 குடும்பங்களுக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறி உள்ளனர். ”யாருக்காவது ஒரே நேரத்தில் 2 லட்டு திண்ண கசக்குமா?”
அதன்படி, சந்தீப் திருமணம் அவரது சொந்த கிராமமான கெரியா கிராமத்தில் நடைபெற்றது. திருமண விழாவின் போது, மணமகனின் குடும்பத்தினர், 2 மணப்பெண்களின் குடும்பத்தினர் மற்றும் ஊர் கிராம மக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். அதன் படி, 2 பெண்களுடன் சந்தீப்க்கு முறைப்படி திருமணம் நடைபெற்றது. அப்போது, ஒருவர் மாற்றி ஒருவருக்கு சந்தீப் அடுத்தடுத்து தாலி கட்டினார். இந்த திருமணத்திற்கு, கோடடோங்ரி கிராம பஞ்சாயத்துத் துணைத் தலைவர் மிஸ்ரிலால் பர்ஹத், சாட்சியாகக் கையெழுத்துப் போட்டுள்ளார்.
திருமணம் முடிந்த நிலையில், 2 பெண்களை திருமணம் செய்ததால் சந்தீப் உய்கே, தற்போது கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.