“இசைக் குழு நடத்தி பல பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, அதனை காணொளியாக எடுத்து சம்மந்தப்பட்ட பெண்களை என் கணவர் மிரட்டி பணம் பறித்து வருகிறார்” என்று, மேடை பாடகர் மீது அவரது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாட்டில் நாகர்கோவில் அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
 
நாகர்கோவில் புத்தேரி பகுதியைச் சேர்ந்த மேடை பாடகியான கோபிகா என்ற பெண், மேடை பாடகரான தனது கணவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை சுமத்தி உள்ளார். 

அதாவது, “நாகர்கோவில் அருகே ஸ்டீபன் என்ற இளைஞர் இசைக்குழு ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய இசைக்குழுவில் பாடுவதற்காக மேடை பாடகியான கோபிகாவை, ஸ்டீபன் அழைத்து உள்ளார். 

அதன்படி, கோபிகாவும் பாட வந்திருக்கிறார். அன்றைய தினம் நிகழ்ச்சியை முடித்த பிறகு, கோபிகாவை அங்குள்ள ஒரு விடுதியில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக ஸ்டீபன் தாலி கட்டியதாகக் கூறப்படுகிறது. 

அதனால், ஸ்டீபனை பிடிக்காமல், அவருடன் பாடகி கோபிகா தற்போது வரை வாழ்ந்து வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அத்துடன், “ஸ்டீபன், கோபிகாவை திருமணம் செய்த அடுத்த சில நாட்களிலேயே, கணவன் ஸ்டீபனின் உண்மையான முகம் மனைவி கோபிகாவிற்கு தெரியவந்து உள்ளதாக கூறப்படுகிறது. 

அப்போது, “தொடர்ந்து. ஓய்வின்றி இசை நிகழ்ச்சிகளுக்கு பாட அழைத்துச் சென்றும், உணவு வழங்காமலும் மனைவி கோபிகாவை, கணவன் ஸ்டீபன் அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார்” என்றும், கூறப்படுகிறது. 

அந்த சமயத்தில், “கணவன் ஸ்டீபனுக்கு ஏற்கனவே கேரளாவைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் ஆனது” ஸ்டீபனின் சகோதரி மூலமாக கோபிகாவிற்கு தெரிய வந்திருக்கிறது. 

“அந்த பெண்ணையும் ஸ்டீபன் அடித்து துன்புறுத்தி கொடுமை படுத்தி வந்ததால், கணவன் ஸ்டீபனை விட்டு அந்த கேரள பெண் பிரிந்து சென்று, காவல் நிலையத்தில் ஸ்டீபன் மீது புகார் அளித்தது” தெரிய வந்தது.

மேலும், “கோபிகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நேரத்திலும், அவரை அறைக்குள் அடைத்து வைத்து ஸ்டீபன் தொடர்ந்து துன்புறுத்தியதால், கணவனின் தொந்தரவு தாங்க முடியாமல் அவரது மனைவி கோபிகா, அவரது அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அந்த நேரத்தில், “பல பெண்களுடன் வயது வித்தியாசம் இல்லாமல் பழக்கம் வைத்துக்கொண்ட ஸ்டீபன், அவர்களுக்கு பாட்டு பாடும் வாய்ப்பு தருவதாக நேரில்
வர வைத்து, அவர்களுக்கு ஆசை காட்டியதோடு திருமணம் செய்துகொள்வதாகவும் வாக்குறுதி அளித்து, அவர்களை தொடர்ந்து மோசடியாக ஸ்டீபன் ஏமாற்றி
வந்திருக்கிறார்” என்றும், அவரது மனைவி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக, “மனைவி கோபிகா வீட்டில் இல்லாத நேரத்தில், பாட வாய்ப்பு கேட்டு வரும் அப்பாவி பெண்களை தனித்தனியாக வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை போட்டோவாக அல்லது வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, அந்த ஆபாச படங்களை காட்டியே சம்மந்தப்பட்ட பெண்களை மிரட்டி அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை அவர் தொடர்ந்து பறித்து வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

மிக முக்கியமாக, மகன் ஸ்டீபன் செய்யும், இந்த பாலியல் பலாத்கார கொடுமைகள் அனைத்தும், அவரது பெற்றோருக்குத் தெரிந்தே நடப்பதாக” அவரது மனைவி கோபிகா பகிரங்கமாக போலீசாரிடம் குற்றம் சாட்டி உள்ளார்.

இப்படியான நிலையில், “மனைவி கோபிகாவை தன்னுடன் நீ வரவில்லை என்றால், உன்னையும் உனது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவேன்” என்று கணவன் ஸ்டீபன் மிரட்டல் விடுத்தார்” என்றும், அவர் மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தனது பெண் குழந்தையுடன் சென்று புகார் அளித்து உள்ளார். 

போலீசாரிடம் ஸ்டீபன் மனைவி அளித்துள்ள புகார் மனுவில், “என் கணவன் ஸ்டீபனிடம் மாட்டிக்கொண்ட அப்பாவி பெண்களை மீட்க வேண்டும் என்றும், பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து மிரட்டி வரும் ஸ்டீபனுக்கு உரியத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என்றும், அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். 

இதனிடையே, மனைவி ஒருவரே, தனது கணவன் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு சுமத்தி உள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.