திருச்செங்கோடு காவல் நிலையம் முன்பு இளைஞர் ஒருவர், “என் பொண்டாட்டி எனக்கு வேணும்.. சேர்த்து வைங்க ப்ளீஸ்” என்று கூறிக்கொண்டே, பிளேடால் தன் உடலை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அப்பூர் பாளையம் பொன் நகர் பகுதியைச் சேர்ந்த சசி குமார் என்பவருக்குக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாசுகி என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 

திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கணவன் - மனைவி இடையே திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதனால், கோபடைந்த சசி குமார் மனைவி வாசுகி, கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு அந்த பகுதியில் உள்ள கூட்டப்பள்ளியில் இருக்கும் தனது  
உறவினர் வீட்டிற்குச் சென்று உள்ளார்.

இந்த தகவலைத் தெரிந்துகொண்ட சசிகுமார், நேற்று முன் தினம் அங்கு அங்கு அரிவாளுடன் சென்று, தகராறு செய்துள்ளார். அத்துடன், மனைவியை தன்னுடன் வரும்படி மனைவி வாசுகியை மிரட்டி உள்ளார்.

எவ்வளவு மிரட்டியும் வாசுகி அச்சம் இல்லாமல் நின்றுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் சசிகுமாரை அங்கிருந்து செல்லும் படி கூறி, அனுப்பி வைத்துள்ளனர். இதனால், அவர் மனைவியை எச்சரித்து விட்டு, அங்கிருந்து சென்றார்.

இதனையடுத்து, இது தொடர்பாக திருச்செங்கோடு நகர் காவல் நிலையத்தில் வாசுகி புகார் அளித்தார். இது தொடர்பாக திருச்செங்கோடு போலீசார், சசிகுமாரை காவல் நிலையம் வரவைத்து எச்சரித்து அனுப்பினர். 

அங்கிருந்து வீடு திரும்பிய சசிகுமார், மீண்டும் கூட்டப்பள்ளி சென்றுள்ளார். அப்போது, அவரது மனைவி வாசுகி குன்னூரிலுள்ள தன் அம்மா வீட்டிற்குச் சென்றது தெரிய வந்தது. 

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சசி குமார், மது போதையில் திருச்செங்கோடு நகர காவல் நிலையம் முன்பு அமர்ந்துகொண்ட சசி குமார், “பிரிந்து சென்ற என் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள். என் பொண்டாட்டி எனக்கு வேணும். சேர்த்து வைங்க” என்று கூறிக்கொண்டே, பிளேடால் தனது உடம்பைக் கீறிக்கொண்டார்.

இதனால், சசிகுமாரின் உடம்பில் கழுத்து, மார்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுத்துக்கொண்டார். இதில், ரத்தம் சொட்டிய நிலையில், அவர் அந்த காவல் நிலைய வாளத்திலேயே அமர்ந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து, அந்த சசிகுமாருக்கு போலீசார் அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது.

மேலும், சசிகுமாரின் இந்த செயல் குறித்து. அவரின் மனைவி வாசுகிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, மனைவி உடன் சேர்த்து வைக்கக் கோரி பிளேடால் இளைஞர் ஒருவர் தனது உடலில் பல இடங்களில் அறுத்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது உள்ளது குறிப்பிடத்தக்கது.