தருமபுரியில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 23 வயது இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவும் இந்த கால சூழலில் கூட பெரும்பாலானவர்கள் அரசு சொல்லும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும் யாரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வில்லை என்பதைப் போன்று தான், இந்த சமூக வெளியில் அன்றாட பாலியல் பலாத்கார சம்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. அப்படிதான், தருமபுரி மாவட்டத்திலும், இப்படியான ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்து உள்ள கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான கரண் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த அங்குள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருந்த 17 வயது சிறுமியை, காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, அந்த சிறுமி பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்து வந்த நிலையில், அந்த சிறுமியை காதலித்து வந்த கரண், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமியை கடத்திச் சென்று உள்ளார். 

அதன் பிறகு, அந்த சிறுமியிடம் ஆசை ஆசையாகப் பேசி, மனதை மாற்றி முயற்சி செய்து அந்த இளைஞன், கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இது குறித்த தகவல் சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்குள்ள அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கரண் என்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். அத்துடன், சிறுமியை மீட்ட போலீசார், அங்குள்ள அரசு மருத்தவுமனையில் பரிசோதனைக்காக அனுமதித்தனர்.

மேலும், கரணிடம் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், விசாரணைக்குப் பிறகு, அவனை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், சென்னையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 20 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 20 வயதான சூர்யா என்ற இளைஞர், அதே பகுதியில் கார்பெண்டராகப் பணியாற்றி வருகிறார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி சிறுமி ஒருவர், சூர்யா உடன் நட்பாகப் பழகி வந்து உள்ளார்.

ஆனால், இதனைக் காதல் என்று தவறாக நினைத்துக்கொண்ட சூர்யா, காதல் சில்மிஷம் என்ற பெயரில், அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, சூர்யாவிடம் சண்டை போட்டு விட்டு வந்து விட்டார். அதன் பிறகு, கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்கு உள்ள தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை மத்திய புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.