தனக்குத்தானே பெண் ஒருவர் பிரசவம் பார்த்துள்ள நிலையில், குழந்தை பிறந்து இறந்ததால் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை செட்டி வீதி அருகே உள்ள உப்புக்கார வீதியைச் சேர்ந்த 38 வயதான விஜயகுமார் என்பவர், நகை பட்டறை தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி 32 வயதான புண்ணியவதி இருக்கிறார். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் உள்ளன.

இந்த சூழலில் தான், 32 வயதான புண்ணியவதி 4 வது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார். அத்துடன், இந்த முறை புண்ணியவதி மன வருத்தத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் தான், தனக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், நான்காவது குழந்தை என்பதால் சற்று அலட்சியமாக தனக்குத்தானே அவர் பிரசவம் பார்த்துள்ளார்.

அப்போது, அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது. ஆனால், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை சரியாக அறுக்காத நிலையில், பிரசவமும் சரியாக பார்க்காததால் தாயும் சேயும் மயங்கி உள்ளனர்.

இதையடுத்து, மயங்கிய தாய் மற்றும் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். 

ஆனால், அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், சரியாக பிரசவம் பார்க்காத காரணத்தால், குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, விரைந்து வந்த பெரியகடை வீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தினார். 

இதனையடுத்து, தனக்குத் தானே பிரசவம் பார்த்த புண்ணியவதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.