பணியில் இருந்த போக்குவரத்து காவலரை நடு ரோட்டில் வைத்து பெண் சரமாரியாகத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மும்பையில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கல்பாதேவியில், இரண்டு பெண்கள் ஹெல்மெட் அணியாமல் தங்களுடைய இருசக்கர வாகனத்தில், அந்த பகுதியில் உள்ள முக்கிய சாலை வழியாக வந்து உள்ளனர். அந்த நேரம் பார்த்து, அங்கு போக்குவரத்து காவலர் ஏக்நாத் பார்த்தே, பணியில் இருந்து உள்ளார்.

அப்போது, அந்த வழியாக அந்த இரு பெண்களும் அந்த வழியாக பயணித்து உள்ளனர். அப்போது, அந்த பெண்களை போக்குவரத்து காவலர் ஏக்நாத் பார்த்தே, தடுத்து நிறுத்தி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக, அவர்களிடம் அபராதம் செலுத்தும் படி போக்குவரத்துக் காவலர் கூறி உள்ளார். இதில், அந்த பெண்களுக்கும், அந்த போலீசாருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. போக போக இந்த வாக்குவாதம் மேலும் முற்றி உள்ளது. 

இதனால், கடும் ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த பெண், போக்குவரத்து காவலரை அங்கேயே எல்லோர் முன்னிலையிலும் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதனை தடுத்து நிறுத்தாத அருகில் இருந்தவர்கள் தாக்குதல் சம்பவத்தை வீடியோவாக எடுத்து உள்ளனர். 

அந்த வீடியோவில் உள்ள காட்சியில், “போக்குவரத்துக் போலீசார், தங்களை இழிவாக பேசிய காரணத்தால் தான், அவரை தாக்கினோம்” என்று, பாதிக்கப்பட்ட பெண்கள் ஆவேசமாக கூறி உள்ளனர்.

இந்த சம்பவம், அங்குள்ள சக காவலர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த சம்பவ இடத்திற்குப் பெண் காவலர்கள் விரைந்து வந்து உள்ளனர். 

பெண் காவலர்கள் வந்ததும், தாக்குதலில் ஈடுபட்ட பெண்களை லோக்மான்யா திலக் மார்க் காவல் நிலையத்திற்கு அவர்கள் அழைத்துச் சென்றனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அத்துடன், கைது செய்யப்பட்ட இரு பெண்களின் பெயரும் சாத்வீகா ராமாகாந்த் திவாரி, மோஹசின் கான் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த இரு பெண்கள் மீதும், அரசு அலுவலரைத் தாக்கியது எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

அது குறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், “பெண்களை இழிவாகப் பேசவில்லை எனவும், அவர்களிடம் கண்ணியமாகவே நடந்து கொண்டதாகவும்” தெரிவித்தார். இது குறித்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அதே போல், தாக்குதலில் ஈடுபட்ட பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, ஹெல்மெட் அணியாத காரணத்தால் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை மறித்த போக்குவரத்து காவலரைப் பெண் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம், மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.