கள்ளக் காதலனுக்கு பிறந்த 2 வது குழந்தை பற்றி ரகசியத்தைக் கணவன் கண்டுபிடித்து விட்டதால், கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவி தன் கணவனை வெறித்தனமாக தாக்கிக் கொன்று விட்டு, அவரது உடலைத் திருட்டுத் தனமாக எரித்து, எலும்புகளை நொறுக்கி சாம்பலை ஆற்றில் கரைத்த கொடூர சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உளுந்தூர்பேட்டை அருகே ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகனுக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு மணிமேகலை என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, பாலமுருகன் - மணிமேகலை தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

இதனிடையே, கட்டடத் தொழிலாளியான பாலமுருகன், தனது மனைவியை சொந்த கிராமத்திலேயே தங்க வைத்து விட்டு, அவர் மட்டும் பெங்களூரில் தங்கி அங்கேயே கட்டட வேலைகளைப் பார்த்து வந்தார். 

அந்த நேரத்தில், சொந்த கிராமத்தில் இருந்த மனைவி மணிமேகலைக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதனால், மணிமேகலை கருவுற்றார். 

இதனையடுத்து, மணிமேகலை பிரசவத்திற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இதனால், தனக்கு 2 வது குழந்தை பிறக்கப் போகிறது என்ற சந்தோசத்தில், பெங்களூரில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கிறார் கணவன் பாலமுருகன்.

அப்போது, ஊர் திரும்பிய பாலமுருகனிடம், “உன் மனைவி மணிமேகலைக்கும், நம் ஊரைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக”  சிலர் கூறி உள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாலமுருகன், மனைவி மீது சந்தேகம் அடைந்துள்ளார். 

மேலும், மருத்துவமனைக்கு சென்று தன் மனைவி மற்றும் 2 வதாக பிறந்த பெண் குழந்தையைப் பார்த்துள்ளார். அப்போது, இன்னும் அதிர்ச்சியடைந்த பாலமுருகன்,  “குழந்தை என் உருவத்தைப் போல் இல்லை. மணிகண்டனைப் போல் இருக்கிறது. நீ இந்த குழந்தையை அவனுக்குத் தான் பெற்று இருக்கிறாய்” என்று ஆவேசமாகக் கூறி விட்டு, கோபத்துடன், அங்கு இருந்த உறவினர்கள் யாரிடமும் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இதனையடுத்து, “இனியும் கணவனை உயிரோடு விட்டால், நிச்சயம் நம் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருப்பான். அதனால், அவனைக் கொன்று விடலாம் ” என்று, அவரது மனைவி மணிமேகலையே கள்ளக் காதலனிடம் கூறி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, அன்று இரவு பேருந்தில் இருந்து இறங்கி வந்த 

பாலமுருகனை பின் தொடர்ந்து சென்று மணிகண்டன், பாலமுருகன் வீட்டிற்குள் சென்ற மறு நிமிடமே நுழைந்து பாலமுருகனை சுவற்றில் தள்ளி கடுமையாகத் தாக்கி உள்ளார். 

மேலும், வீட்டில் தண்ணீர் பிடிக்க வைத்திருந்த பித்தளை பாத்திரத்தாலும், அங்கிருந்த சுத்தியலாலும் கடுமையாகப் பாலமுருகனைத் தாக்கி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு, சடலத்தை அங்கேயே போட்டு விட்டு தனது வீட்டிற்கு வந்த மணிகண்டன், இது தொடர்பாகத் தனது சகோதரர் தனசேகரிடம் கூறி உதவி கேட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, இரு சக்கர வாகனத்தில் சென்ற தனசேகரன், உயிரிழந்த பாலமுருகன் உடலைச் சாக்குப் பையில் கட்டி அதி காலை நேரத்தில் அங்குள்ள சுடுகாட்டில் எரித்து எலும்புகளைப் பெரிய கற்களைக் கொண்டு நொறுக்கி உள்ளார். அதன் பிறகு, அந்த சாம்பலை அருகில் உள்ள ஆற்றில் கரைத்து விட்டு நிம்மதி பெரு மூச்சுவிட்டு விட்டு அங்கிருந்து வீடு திரும்பி உள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதங்களாகப் பாலமுருகனை நேரில் பார்க்க முடியாமலும், அவரை தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்ததால் சந்தேகம் அடைந்த பாலமுருகனின் சகோதரியின் கணவர் கோவிந்தராஜ், “எனது மைத்துனரைக் காணவில்லை” என்று, அங்குள்ள திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர், பாலமுருகனின் மனைவி மணிமேகலைக்கும் மணிகண்டனுக்கும் இடையே இருந்த கள்ளக் காதல் பற்றிக் கூறியுள்ளனர். இதனையடுத்து, மணிகண்டனை காவல் நிலையம் அழைத்துச்  சென்று, தங்களுக்கே உரியப் பாணியில்  போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பாலமுருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

அதன் தொடர்ச்சியாக, பாலமுருகனை கொலை செய்த மனைவி மணிமேகலை, கள்ளக் காதலன் மணிகண்டன், அவரது சகோதரர் தனசேகர் ஆகியே 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டது.