கள்ளக் காதலன் வீட்டிற்கே சென்று குடும்பம் நடத்திய மனைவியை, நைசா அன்பா பேசி அழைத்து வரும் போது, மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை செங்குன்றம் பொதுப்பணித் துறை ஆபீஸ் தெருவைச் சேர்ந்த 32 வயதான முருகன் என்பவருக்கு, 26 வயதில் சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

இதனிடையே, முருகன் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். முருகன் வேலைக்குச் சென்ற பிறகு, வீட்டில் இருந்த சுகன்யாவிற்கும், அங்குள்ள நாரவாரிகுப்பத்தைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், கள்ளக் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

மனைவியின் இந்த கள்ளக் காதல் விவகாரம், முருகனுக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக தன் மனைவியை அழைத்து கண்டித்து உள்ளார். இதனால், கணவன் - மனைவிக்கு இடையே சண்டை வந்துள்ளது. அதன் பிறகு, கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துகொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் கடும் கோபம் அடைந்த முருகன், தன் மனைவியை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கணவனுடன் கடுமையாகச் சண்டை போட்டுவிட்டுக் கோபித்துக்கொண்டு தனது கள்ளக் காதலன் பாண்டியுடன் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

இதனால், இன்னும் மன வேதனை அடைந்த கணவன் முருகன், கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிகிறது. இதனையடுத்து, மனைவியைத் தேடிச் சென்ற முருகன், அங்கு மனைவியிடம் நைசாகவும், அன்பாகவும் பேசி தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்து உள்ளார்.

அதனை நம்பி அவர் மனைவியும் முருகனுடன் வந்துள்ளார். அப்போது, முருகன் தன்னுடைய ஆட்டோவில் மனைவியை ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டு உள்ளார். ஆனால், ஆட்டோவில் புறப்பட்ட அடுத்த சிறிது நேரத்தில் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் சாலையோரம் ஆட்டோவை நிறுத்திய முருகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மனைவி சுகன்யாவின் கழுத்தை அறுத்து உள்ளார். இதனால், வலியால் துடித்து சுகன்யா சத்தம் போட்டு கத்தி உள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் சிலர் ஓடி வந்து பார்த்து உள்ளனர். அப்போது, “மனைவிக்கு அடிப்பட்டு விட்டது. அதான், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். அவள் வலி தாங்க முடியாமல் கத்துகிறார் என்று பதில் அளித்து இருக்கிறார். 

அதன் பிறகு, அங்கிருந்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு, புழல் ஏரி அருகே நடு வழியிலேயே தன் மனைவியை ரத்த காயங்களுடன் இறக்கி விட்டுவிட்டு, அங்கு முருகன் சென்றுள்ளார்.

இதனால், சுகன்யா ரத்த வெள்ளத்தில் சாலையின் நடுவே போராடிக்கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் சுகன்யாவை மீட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சுகன்யாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக, அங்குள்ள செங்குன்றம் காவல் நிலையத்திற்கு வந்த முருகன், “நான் என் மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்ய முயன்றேன்” என்று, கூறி போலீசாரிடம் சரணடைந்தார். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.