திருவண்ணாமலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர், சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீசார் தன்னை அவமானப் படுத்தியதாகக் கூறி, சிறையிலேயே விசமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தந்தை - மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களைக் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்த அன்று இரவே பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. மறுநாள் காலை தந்தை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து சிறையிலேயே உயிரிழந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால், கடும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள், ஊர் மக்கள் அனைவரும், சாத்தான் குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

குறிப்பாக, காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பத்திலிருந்து தமிழகத்தில் போலீசார் மீதான 

நன்மதிப்பு முற்றிலுமாக குறைந்து, அவர்களைப் பொதுமக்கள் எதிர்மறையாகப் பார்க்கத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. போலீசாருக்கு இருந்த நன்மதிப்பு தற்போது இல்லை என்றும் ஒரு பக்கம் கருத்து முன்வைக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், திருவண்ணாமலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர், சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீசார் தன்னை அவமானப் படுத்தியதாகக் கூறி, சிறையிலேயே விசமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மீண்டும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், போலீசாருக்கு எதிரான நன்மதிப்பு மேலும் குறைந்து விட்டது போன்ற தோற்றம் காணப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சா புரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கத்திற்கும், அவரது சகோதரர் ஆறுமுகத்திற்கும் இடையே, நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. 

இதனால், ஆறுமுகம் தன் அடியாட்களுடன் தன் சகோதரர் தர்மலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில், தர்மலிங்கம் ஆறுமுகத்தை தடுத்துள்ளார். அப்போது, ஆறுமுகத்திற்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதில், மருத்துமவனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், அந்த பகுதியில் உள்ள மேல்செங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அத்துடன், தலைமறைவாக இருக்கும் தர்மலிங்கத்தையும் போலீசார் தேடி வந்தனர். 

மேலும், தர்மலிங்கம் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது வீட்டிற்கு வந்த போலீசார், அவரது மனைவி சுதர்சனா, மகன் விஜயகுமாரிடம் தர்மலிங்கம் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, அவர்களிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், மகன் விஜயகுமாரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். 

தர்மலிங்கத்தை தேடிச் சென்ற அவரது தயார் சுதர்சனா, தனது மகனைக் காவல் நிலையத்திலிருந்து மீட்க முயன்றுள்ளார். அப்போது, போலீசார், மகன் விஜயகுமார் முன்னிலையிலேயே தயார் சுதர்சனாவை தரக்குறைவாக நடத்தியதாகவும், பேசியதாகவும் கூறப்படுகிறது. 

அத்துடன், மகனை மீட்கச் சென்ற தாயார் சுதர்சனாவையும் போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுதர்சனா, சிறையிலேயே விசமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் உயர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது குறித்த தகவல், அந்த கிராமம் முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஆறுமுகம், சிவபெருமாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், சுதர்சனாவை தற்கொலைக்குத் தூண்டிய காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன், ஆய்வாளர் மலர், காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதி முழுவதும் 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

ஏன் போலீஸ்கார் இப்படியெல்லாம் பண்றிங்க?!