பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலுறவுக்கு அழைத்த இளைஞரை, நேரில் வரவழைத்து பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது. 

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள கிராமமான பத்ரகாளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி இவரது மனைவி ராஜேஸ்வரி. இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 

இவர் இயற்கை முறையிலான சோப்பு, ஷாம்பூ உள்ளிட்ட பொருள்களை தயார் செய்து இணையதளம் மூலம் விளம்பரம் செய்து பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

  கடந்த ஒராண்டிற்கு முன்பு முகநூலில் ஆபாச படத்தை அனுப்பி தொல்லை கொடுத்த இளைஞரை லாவகமாகப் பேசி பிடித்த ராஜேஸ்வரி என்ற பெண், அந்த இளைஞரை காவல் துறையினரிடம் பிடித்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜேஸ்வரியின் தோழி ஒருவருக்கு தேனியைச் சேர்ந்த ஆசாமி ஒருவர் முகநூல் வழியாக ஆபாசமாக சாட்டிங் செய்து தொல்லை கொடுத்து வருவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அந்த இளைஞரின் முகநூலில் உள்ள ஆர்டிஸ் பாண்டி என்ற ஐடியில் ராஜேஸ்வரியும் சாட்டிங் செய்துள்ளார். 

இதற்கு அந்த இளைஞரும் ஆபாச சாட் செய்ய தொடங்கியுள்ளார். தொடர்ந்து அந்த இளைஞனுக்கு சாதகமாக சாட்டிங் செய்த ராஜேஸ்வரி, ஒரு கட்டத்தில் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று நைசா பேசி தனது ஊருக்கு அழைத்துள்ளார். 

சாட்டிங் செய்த அரை மணி நேரத்தில் பத்திரகாளிபுரத்திற்கு அவர் வந்துள்ளார் அந்த இளைஞர். அப்போது, அந்த இளைஞரை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்பதற்க்காக முன்கூட்டியே ராஜேஸ்வரி தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் திட்டம் வருத்து உப்புக்கோட்டை பகுதியில் தயாராக இருந்துள்ளனர். 

இது எதுவும் தெரியாத அந்த இளைஞர், அங்கு வந்த இளைஞரை அவர்கள் லாவகமாக பிடித்து தர்ம அடி கொடுத்து உள்ளனர்.

அதன் பின்னர், அந்த இளைஞர் "தெரியாமல் செய்துவிட்டேன், நான் செய்தது தவறு தான். இனி மேல், இது போன்ற தவறை செய்யமாட்டேன்" என அங்கிருந்த அனைவரது காலிலும் விழுந்து கண்ணீர் விட்டு கதறி உள்ளார். 

இதையடுத்து, அந்த இளைஞரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை காவல் துறையினரிடம் ஒப்படைக்காமல் அந்த பகுதி மக்கள் எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
மேலும், பிடிபட்ட அந்த இளைஞர் தேனி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான பாண்டி என்பதும், இது போல் பல பெண்களுக்கு முகநூல் மூலம் ஆபாச படங்கள் அனுப்பி தனது கைவரிசையை காட்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்று "சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பும் இது போன்ற ரோமியோக்களுக்கு பத்ரகாளிபுரத்தைச் சேர்ந்த பெண் செய்த செயல் ஒரு பாடமாக அமைந்துள்ளது". தற்போது இந்தக் காணொலி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.