15 வருடத்திற்கு முந்தைய காதல், திருமணத்திற்கு பின்பும் கள்ளக் காதலாக மாறிய நிலையில், கண்டுப்பிடித்து கண்டித்த கணவனை கொன்று உடலை எரித்த மனைவியால் கடும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 44 வயதான தங்கவேல் என்பவர், தன்னுடைய மனைவி 35 வயதான விமலா ராணி உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 14 வயதில் மகன் உள்ளார். அந்த சிறுவன், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த தங்கவேல் - விமலா ராணி தம்பதியினர், காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் இருக்கும் ஆத்தனஞ்சேரி பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தனர்.

கணவன் தங்கவேல், அங்குள்ள ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். 

இப்படியான நிலையில், கடந்த மாதம் 31 ஆம் தேதி தங்கவேலின் தந்தை 70 வயதான திருமலையாண்டி மற்றும் சகோதரர் 47 வயதான சக்திவேல் ஆகியோர், தங்கவேலின் செல்போன் எண்ணுக்கு அழைத்து உள்ளனர்.

அப்போது, அவரது மனைவி விமலா ராணி அந்த போனை எடுத்து பேசிய நிலையில், அவர்களிடம் சரியான பதில் கூறாமல் போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறார். 

ஆனால், அதன் பிறகு அவரது செல்போனை தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளன.

இதனால், தங்கவேல் மாயமான நிலையில் அவரது மனைவி விமலா ராணி மீது சந்தேகமடைந்த திருமலையாண்டி, அவருடைய மூத்த மகன் சக்திவேல் மற்றும் உறவினர்களுடன் ஆத்தனஞ்சேரியில் உள்ள வீட்டிற்கு நேரில் வருகை தந்துள்ளார். ஆனால், அங்கு மகன் தங்கவேலின் வீடு பூட்டி இருந்துள்ளது. 

இதனால், இன்னும் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தார்கள். 

இந்த சூழலில், நேற்று முன் தினம் விமலா ராணி, மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது, விமலா ராணி அளித்த வாக்குமூலத்தில், “எனக்கும், சேலத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக் காதல் ஏற்பட்டது 
என்றும், இதைத் தெரிந்துகொண்ட எனது கணவர், என்னைக் கண்டித்தார்” என்றும், குறிப்பிட்டிருக்கிறார். 

“இது தொடர்பாக கடந்த 28 ஆம் தேதி, இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது என்றும், இதனால் கடும் ஆத்திரமடைந்த நான், எனது கள்ளக் காதலன் ராஜாவும் சேர்ந்து, எனது கணவர் தங்கவேலை வெட்டிக் கொலை செய்தோம்” என்றும், வாக்குமூலம் அளித்திருக்கிறார். 

இதனையடுத்து, “என் கணவரின் உடலை அச்சரப்பாக்கம் அருகே உள்ள வனப்பகுதிக்குத் தூக்கிச் சென்று தீ வைத்து எரித்து விட்டோம்” என்றும், அவர் கூறியிருக்கிறார்.

மேலும், “திருமணத்திற்கு முன்பே, அதாவது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே கள்ளக் காதலன் ராஜாவை, விமலா ராணி காதலித்து வந்ததையும், திருமணத்திற்குப் 
பின்பு, அது கள்ளக் காதலாக மாறியதையும்” போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, விமலா ராணியை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

குறிப்பாக, இந்த வழக்கில் விசாரணை நடத்தி வந்த தனிப்படை போலீசார், விமலா ராணியின் கள்ளக் காதலன் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.