கள்ளக் காதல் விவகாரத்தில், காதல் கணவனை சிறுவர்களை வைத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 6 பேரை, போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

கோவை ஓண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சேது ராஜாராம் சிங் என்பவர், அந்த பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற பெண்ணை, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்குப் பிறகு, மகிழ்ச்சியாக வாழ்ந்த இவர்களுக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளன. சேது ராஜாராம் சிங்கின் மனைவி சவுந்தர்யா, அங்குள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார்.

இப்படியான சூழ்நிலையில் தான், கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.

அத்துடன், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வந்த சவுந்தர்யாவிற்கும், அங்கு பணிபுரியும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் 23 வயதான குணசேகர் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட காதல் கணவன் சேது ராஜாராம் சிங்கினை, தனது கள்ளக் காதலன் குணசேகர் மற்றும் தனது தம்பி ஆகியோர் மூலமாகக் கொலை செய்ய மனைவி சவுந்தர்யா திட்டம் போட்டு உள்ளார்.

இந்த நிலையில் தான், நேற்று முன் தினம் 25 ஆம் தேதி இரவு வீட்டின் வாசலில் சேது ராஜாராம் சிங் மற்றும் சவுந்தர்யா ஆகியோர் பேசிக்கொண்டு, அங்கு நின்று கொண்டு இருந்தனர். 

அப்போது, அங்கு வந்த கள்ளக் காதலன் குணசேகரன், சவுந்தர்யாவின் 17 வயது சகோதரன் மற்றும் அவரது நண்பர்கள் சேது ராஜாராம் சிங்கினை வந்த வேகத்தில் மிக கொடூரமாகத் தாக்கத் தொடங்கி உள்ளனர்.

அத்துடன், அவரது கழுத்தறுத்து கொலை செய்யவும் அவர்கள் முயன்று உள்ளனர். அப்போது, கழுத்தில் காயம் ஏற்பட்ட சேது ராஜாராம் சிங், சத்தம் போட்டு கதறி உள்ளார். இதனால், அந்த பகுதியில் இருந்து அக்கம் பக்கத்தினர் வரத் தொடங்கி உள்ளனர். இதனால், பயந்து போன அந்த சிறுவர்கள் அவரை கொலை செய்யாமல், படுகாயங்களுடன் அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

பின்னர், அங்கு ஓடி வந்த பொது மக்கள், ரத்த காயங்களுடன் சரிந்து கிடந்த சேது ராஜாராம் சிங்கின் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சேது ராஜாராம் சிங், மயக்கம் தெளிந்து உள்ளார். அப்போது, போலீசாரிடம் சேது ராஜாராமிடம் விசாரணை நடத்தி உள்ளனர். 

அப்போது, “தனது மனைவி சவுந்தர்யா அவரது கள்ளக் காதலன் குணசேகர், மனைவியின் தம்பி மற்றும் அவனது நண்பர்களின் உதவியுடன் என்னை கழுத்தை அறுத்து கொலை செய்ய வந்தனர்” என்று கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, சவுந்தர்யா மற்றும் குணசேகரனை கைது செய்த போலீசார், சவுந்தர்யாவின் 17 வயது தம்பி மற்றும் அவனது 3 நண்பர்களையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு கொலை செய்ய முயன்ற 4 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் போலீசார் சேர்த்தனர். பின்னர், கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி சவுந்தர்யாவையும், கள்ளக் காதலன் குணசேகரனையும் கோவை சிறையில் அடைத்தனர்.  

இதனிடையே, காதல் திருமணம் செய்த பெண் தனது கணவனை, கள்ளக் காதலன் மற்றும் தனது தம்பி உதவியுடன் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.