“கொரோனா 3 வது அலை இந்தியாவில் ஏற்கனவே உச்சம் தொட்டு விட்ட நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதிய உச்சம் தொடும்” என்று, கான்பூர் ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 3 வது அலையாக வீசி வருகிறது. என்றாலும், தமிழ்நாட்டில் கொரோான எண்ணிக்கையானது தற்போது தாறுமாறாக எகிறிக்கொண்டு இருக்கிறது. அதுவும், பொங்கல் பண்டிக்கைக்குப் பிறகு, கொரோனாவின் தாக்கம் சற்று அதிகமாக பதிவாகி வருகிறது.

அத்துடன், “தமிழ்நாட்டில் அடுத்த 2, 3 நாட்களுக்கு கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும்” என்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 26,981 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 35 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அதே நேரத்தில், இந்திய அளவில் கொரோனா பாதிப்பை ஒப்பிடும் போது, தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

இந்த சூழலில் தான், “இந்தியாவில் பரவி வரும் கொரோனா 3 ஆம் அலையானது, எப்போது உச்சம் தொடும்?” என்கிற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்து உள்ளது.

இந்த கேள்விக்கு கொரோனா ஆராய்ச்சியாளரான கான்பூர் ஐ.ஐ.டி. விஞ்ஞானி மணீந்திர அகர்வால் தற்போது பதில் அளித்து உள்ளார்.

அதன்படி, “இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா 3 ஆம் அலையானது டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களில் கடந்த ஒரு வாரத்தில் ஏற்கனவே உச்சம் தொட்டு விட்டது” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

அந்த வகையில், “மஹாராஷ்டிரா, கர்நாடகம், உத்தரப் பிரதேசம், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில் இந்த வாரம் புதிய உச்சத்தை தொடும்” என்றும், அவர் கணித்து உள்ளார்.

குறிப்பாக, “தமிழ்நாடு, ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்களில் அடுத்த வாரம் கொரோனா புதிய உச்சத்தை தொடும்” என்றும், கான்பூர் ஐ.ஐ.டி. விஞ்ஞானி மணீந்திர அகர்வால் புதிய எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அதன்படி பார்க்கும் போது, “ஜனவரி 23 ஆம் தேதி தான், தேசிய அளவில் 3 வது அலை புதிய உச்சம் தொடும்” என்றும், அவர் கணித்து உள்ளார். 

ஆனாலும், தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்துக்குள் தான் பதிவாகும் என்றும், தினசரி பாதிப்பு 4 லட்சத்தைக் கடக்க வாய்ப்பு இல்லை” என்றும், அவர்  கூறியுள்ளார்.

அத்துடன், “இந்தியாவில் மக்கள் தொகையில் 2 பிரிவினர் உள்ளனர் என்றும், அதில் ஒரு பிரிவினர், ஒமைக்ரானுக்கு எதிராக குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்றும், மற்றொரு பிரிவினர் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக உள்ளனர்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

இதில், “முதல் பிரிவினரில் தொற்று பரவியதால் அதிகம் பேர் கூர்மையான பாதிப்புக்குள்ளாகினர் என்றும், ஆனால் இப்போது முதல் பிரிவினருக்கு தொற்று தீர்ந்து விட்டது என்றும், இதன் காரணமாக கொரோனா பரவல் மெதுவாக உள்ளது” என்றும், அவர் கூறியுள்ளார்.

அதே போல், “கடந்த ஆண்டு நவம்பரில் ஒமைக்ரான் பரவத் தொடங்கிய போது, நிறைய கவலைகுறிய தகவல்களே வெளி வந்தன என்றும், இருப்பினும் கடந்த வாரம் அல்லது அதற்கு மேலாக கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் ஒமைக்ரான் மாறுபாடு லேசான நோய்த் தொற்றை மட்டுமே ஏற்படுத்துகிறது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது” என்றும்,  அவர் குறிப்பிட்டு கூறினார். 

“இந்தியாவில் கொரோனா பரவலை, சோதனைக்கு பதிலாக நிலையான மருத்துவ சிகிச்சை மூலம் அதை கையாள முடிவு செய்யப்பட்டு உள்ளது” என்றும், கான்பூர் ஐ.ஐ.டி. விஞ்ஞானி மணீந்திர அகர்வால் புதிய நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதனிடையே, மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 499 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.