சென்னையில் இடைவிடாமல் 13 மணிநேரம் கொட்டித் தீர்த்த அதிக கனமழைக்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு துவங்கிய கனமழை விடாது, நேற்று பிற்பகல் வரை சுமார் 13 மணிநேரம் கனமழை கொட்டி தீர்த்தது.

எதிர்பாராதவிதமாக பெய்த பெருமழையால் சூழந்த வெள்ளம், சென்னையை புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரில் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது. 

வடசென்னை மற்றும் தென் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கிக் கிடக்கின்றது. செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
 
சென்னையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை, வானிலை மையமே எதிர்பார்க்காதது. தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருந்த சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையில் பேய் மழை பெய்யும் என எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.

w2

கடந்த 6-ம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை நிலவரத்தில் கூட , சென்னையில் கனமழை பெய்யும் என முன் எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. ஆனாலும் சென்னையில் அதிக கனமழை கொட்டி தீர்த்ததற்கு என்ன காரணம் என்று தெரியாமல் மக்கள் குழம்பி உள்ளனர். 
சென்னையில் திடீர் கனமழை கொட்டியது ஏன்? என்பது குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்தரன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ‘சென்னைக்கு சனிக்கிழமை அன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை .

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டுமே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சென்னையில் குறுகிய காலத்திலேயே அதிக கனமழை பதிவாகியது. இரவு 10 மணி வரை 3 செ.மீ மழையும், 1 - 1.45 மணி வரை 6 செ.மீ மழையும், 5 - 6 மணிவரை 7 செ.மீ மழையும் பதிவாகியது. 

இயல்பாக 23 சென்டிமீட்டர் மழை பெய்யும். ஆனால் 43 அதிகமாக அதாவது 33 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது செங்கல்பட்டு , திருவள்ளூர், காஞ்சிபுரத்துக்கு கனமழை எச்சரிக்கை கொடுத்தோம் . சென்னையில் மிக குறுகிய நேரத்தில் வானிலை மாறியது. கனமழை கொட்டியது . இதை எதிர்பார்க்கவில்லை. 

w1

இது ‘மெசஸ்கேல் பிலாமினா' நிகழ்வாக சொல்லப்படுகிறது. இதனை முன்பே கணிக்க முடியாது. உதாரணத்துக்கு சொல்லவேண்டும் என்றால், நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இந்த 2 இடங்களுக்கு இடைபட்ட 20 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மழை அளவு வித்தியாசப்பட்டு இருப்பதை பார்க்கலாம். 

காலம் மற்றும் தூர அளவில் வெகு குறுகிய காலத்தில் இதுபோல் அதிகனமழை பதிவாகி இருக்கிறது. சனிக்கிழமை காலையில் நாங்கள் வானிலை தகவல் கொடுக்கும்போது இது தெரியவில்லை. சில வானிலை மாற்றங்களை சில மணி நேரம் முன்பாகத்தான் கணிக்க முடியும். 

சென்னையில் பெரு மழைக்கு மேக வெடிப்பு காரணமில்லை. ஆனால் மேக வெடிப்பு போன்று கனமழை பெய்துள்ளது. இப்போது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை வானிலையை கணித்து வருகின்றனர்’ என்று வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.