“நான் அதிமுக பொதுச்செயலாளராக வரவேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றும், தொண்டர்களின் விருப்பப்படி நிச்சயம் தலைமை ஏற்பேன்” என்றும், சசிகலா பேசிய புதிய ஆடியோ வெளியாகி உள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலைக்கு சென்றது வந்தது முதல் அதிமுகவில் அடுத்தடுத்து பல அதிரடியான விசயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

அத்துடன், சசிகலா அரசியல் ரீ என்ட்ரியின் முன்னோட்ட காட்சிகள் எல்லாம் தமிழக அரசியலில் ஒவ்வொன்றாக தற்போது அரங்கேறி வருகின்றன.

அதன் படி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்கள் இடையே சசிகலா தொலைப்பேசியில் பேசி வரும் உரையாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருவது, அக்கட்சியினரிடையே பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. சசிகலாவின் இந்த செயல்பாடுகள் அதிமுக தலைமைக்கான செக் வைக்கும் நடவடிக்கை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது, அதன் தொடர்ச்சியாக சென்னையைச் சேர்ந்த புவனேந்திரன், விருதுநகரைச் சேர்ந்த குரு ராமச்சந்திரன், திருப்பூரைச் சேர்ந்த சமரசன், ராமநாபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஈரோட்டைச் சேர்ந்த கோபால், மற்றும் பண்ருட்டியைச் சேர்ந்த உத்திரவேல் ஆகியோருடன் நேற்றைய தினம் சசிகலா போனில் பேசினார். இது தொடர்பான அந்த ஆடியோ தற்போது வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த ஆடியோவில் பேசி உள்ள சசிகலா, “நமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள், தொண்டர்களை கவலைப்பட இனி நான் விடமாட்டேன்” என்று, குறிப்பிட்டு பேசினார்.

அத்துடன், “விரைவில் நான் வந்துவிடுவேன் என்றும், கட்சியை அழிக்க யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன் என்றும், தொண்டர்கள் தயவுடன் கட்சியை நான் நிச்சயம் மீட்பேன்” என்றும், சசிகலா பேசி உள்ளார்.

“தமிழகத்தில் ஊரடங்கு முடிந்ததும், அம்மா நினைவிடம் செல்வேன் என்றும், அங்கிருந்து தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்களைச் சந்திக்க சுற்றுப் பயணம் செல்கிறேன்” என்றும், அந்த ஆடியோவில் அவர் பேசி உள்ளார். 

“தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் எனக்கு நிறைய இருக்கின்றன என்றும், முதலில் கட்சியை சரி செய்ய வேண்டும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“கட்சியை நல்லபடியாக வழி நடத்தி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும்” என்றும், சசிகலா உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, “அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக” கூறிய சசிசகலா, தற்போது தினந்தோறும் அதிமுக தொண்டர்களிடையே பேசி வருகிறார். 

மேலும், அதிமுக தொண்டர்களிடையே சசிகலா பேசும் தொலைபேசி உரையாடல்கள், அவ்வப்போது ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வெளியாகி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.