அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது போடப்பட்டுள்ள வழக்குகள் என்ன? குற்றச்சாட்டுகள் என்ன? முறைகேட்டில் யார் யார் மீது வழக்குகள்? பதிவு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அவர், அதிமுகவின்
கடந்த கால ஆட்சியின் போது அமைச்சராக இருந்த நேரத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த சோதனையை
நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 7 நபர்கள், 10 நிறுவனங்கள் என மொத்தம் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக நேற்று முதல் தகவல் அறிக்கையான FIR தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குகள் விவரம்

அதன் படி 120பி, 420, 409 IPC, 109 உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதில், பெரும்பாலான பிரிவுகள் அரசாங்க பொறுப்பில் உள்ளோர் ஊழல் செய்தல், ஏமாற்றுதல், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உள்ளன.

தகவல் அறிக்கை FIR ல் உள்ள குற்றச்சாட்டு

அத்துடன், கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை எஸ்.பி. வேலுமணி, கோவை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட கான்ட்ராக்டராக இருந்து உள்ளார். 

இந்த நிலையில், கடந்த 1999 ஆம் ஆண்டு தன்னுடைய உறவினருடன் சேர்ந்து தனது சொந்த நிறுவனத்தை துவங்கி கோவை மாநகராட்சி டென்டர்களை வாங்கி வந்திருக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார் அவர். ஆனால், அந்த நிறுவனத்தை தொடர்ந்து அவரது சகோதரர் அன்பரசன் நடத்தி வந்ததாக FIR ல் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.

மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அவர் மற்றும் அவரது உறவினர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு பல டென்டர்களை கொடுத்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது. 

கான்ட்டாக்டுகளை தான் சார்ந்த நிறுவனங்களுக்கு கொடுக்க, டெண்டர் மேசடியிலும் வேலுமணி ஈடுபட்டு உள்ளார் என்றும் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது.

FIRல் குறிப்பிடப்பட்டுள்ள 10 நிறுவனங்களின் மொத்த லாபம் குறுகிய காலத்தில் பன்மடங்கு உயர்துள்ளதும் FIRல் கூறப்பட்டுள்ளது.

அசுர வேக வளர்ச்சி மற்றும் குறுகிய காலத்தில் எஸ்.பி. வேலுமணியை சார்ந்த நிறுவனங்களின் பல மடங்கு லாபம் அதிகரித்து உள்ளதாகவும் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது.

810 கோடி ரூபாய்க்கான டெண்டர்

சென்னை மாநகராட்சி டென்டர் 462.02 கோடி ரூபாய் மதிப்பிலான டென்டர், கோவை மாநகராட்சி பணிகளுக்கான அரசு டென்டர் 346.81 கோடி ரூபாய் என மொத்தமாக 810 கோடி ரூபாய்க்கான டெண்டர் எஸ்.பி. வேலுமணி, தனது உறவினர்களும், தனது நண்பர்களும் நடத்தும் பல்வேறு நிறுவனங்களுக்கு பிரித்து கொடுத்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இப்படியாக, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி முடியும் வரை பல 100 கோடி ரூபாய்க்கான அரசு கான்ட்ராக்டுகளும், டென்டர்களும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தான் சம்பந்தப்பட்ட நிறுவங்களுக்கு பல கோடி ரூபாய் லாபத்தை கொடுத்து உள்ளார் என்ற குற்றச்சாட்டே முதன்மையாக வைக்கப்படுகிறது.

யார் யார் மீது வழக்கு?

குறிப்பாக, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் பதிவு செய்துள்ள FIR யில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெயர் இடம் பெற்றுள்ளது. 

 A1 - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
A2 - வேலுமணியின் சகோதரர் அன்பரசன்
A3 - கே.சி.பி.என்ஜினியர்ஸ் நிறுவனம்
A4 - கே.சி.பி.என்ஜினியர்ஸ் நிறுவன எம்.டி. சந்திரபிரகாஷ்
A5 - கே.சி.பி.என்ஜினியர்ஸ் நிறுவன இயக்குனர் சந்திரசேகர்
A6 - எஸ்.பி.பில்டர்ஸ் நிறுவன உரிமையாளர் முருகேசன்
A8 - ஜேசு ராபர்ட் ராஜா மற்றும்
A8 -  முதல் A15 - வரை 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல்,

- தி எஸ்-டெக் மெஷினரி, கன்ஸ்டரானிக்ஸ் இன்ஃரா லிமிடெட்
-  கன்ஸ்ட்ராமால் குட் பிரைவேட் லிமிடெட்
- ஸ்ரீமகா கணபதி ஜூவல்லர்ஸ்
- ஆலயம் பவுண்டேஷன்ஸ்
- வைடூர்யா ஓட்டல்ஸ்
- ரத்னா லட்சுமி ஓட்டல்கள்
- ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
- ஆர்.எஸ்.பி. இன்ஃரா பிரைவேட் லிமிடெட்
- A17- சி.ஆர். கன்ஸ்ட்ரக்சன் நிறுவன உரிமையாளர் கு.ராஜன்
- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சகோதரர் அன்பரசன் உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.