தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ள நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை, தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. 

இதற்கிடையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய்கிழமையான நாளை உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இதனால் மழையின் தீவிரம் தமிழகத்தில் தற்போது இருப்பதை காட்டிலும் அதிகரித்து காணப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், இன்றும், நாளையும் சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் அதிகாலையில் இருந்து இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

j1

நாளை உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமா என்று உறுதியாக தெரியவில்லை என்று வாளிலை மையம் தெரிவித்துள்ளது.  அதேபோல் தாழ்வு மண்டலமாக மாறினால், புயலாக உருவெடுக்குமா என்றும் தெரியவில்லை என்றும், இது தொடக்க நிலைதான் என்றும் வாளிலை மையம் கூறியுள்ளது. 

ஆரம்பத்திலேயே அனைத்தையும் கணிக்க முடியாது என்பதால், தாழ்வு நிலை உருவாவதை வானிலை ஆய்வு மையம் கண்காணிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான், நாளை உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார்.  அதில், ‘நவம்பர் 10-12 தேதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையை கண்காணிக்க வேண்டும். 

இந்த தாழ்வு நிலை பெரிய காற்று கொண்ட புயலாக மாறுவதற்கு போதிய அவகாசம் இல்லை. நேரம் குறைவாகவே இருக்கிறது. ஆனால் புயல் உருவாகிறதோ, இல்லையோ, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும், அதன் அண்டை மாவட்டங்களிலும் மழைக்கான அச்சுறுத்தல் இருக்கிறது. இதையும் பாதுகாப்பாக கடந்து செல்வோம் என நம்புவோம்’ என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

j2

இந்தநிலையில், கரூர், வெள்ளியணை, மாயனூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை,  லாலாப்பேட்டை, மகளிப்பட்டி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் பலத்த கன மழையும் பெய்தது.

கனமழை காரணமாக கரூர் பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மழை பெய்யும் காலங்களில் சாலை ஓரங்களில் வடிகால் நீர் வெளியேற சரியான வசதி இல்லாததால் மழைநீர் விளை நிலங்களுக்குள் புகும் நிலை ஏற்படுகிறது. எனவே, மகிளிப்பட்டியில் இருந்து நந்தன் கோட்டை செல்லும் சாலையில் உள்ள சிறிய குழாய் அப்புறப்படுத்திவிட்டு பெரிய பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.