எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் அவரை கைது செய்ய மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.

நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் தொடர்ந்து அடுத்தடுத்து புதிய புதிய சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவர் வாய் திறந்தாலே அது சர்ச்சையாகி விடுகிறதா? அல்லது சர்ச்சைக்குரிய கருத்தைப் பேசுவதற்காகவே, அவர் வாய் திறக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழகத்தின் சில இடங்களில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகள் மீது காவிச்சாயம் பூசி அவமதித்த சம்பவங்கள் கடந்த மாதம் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இந்த சம்பத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமியும் வன்மையாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். 

அத்துடன், “காவிச்சாயம்பூசி களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். 

இது தொடர்பாக, கருத்து தெரிவித்த, பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி சேகர், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், “காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழ்நாடு முதலமைச்சர், காவி நிறம் உள்ளதால் களங்கமான தேசியக் கொடியைத் தான், ஆகஸ்டு 15 ஆம் தேதி ஏற்றப்போகிறாரா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இது குறித்து நடிகர் எஸ்.வி சேகருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து, எதிர்ப்புக் குரல்களை எழுப்பினர். இது தொடர்பாகப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் எஸ்.வி. சேகரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். “சிறை செல்வது தான், எஸ்.வி சேகர், விருப்பம் என்றால், அதை அரசு நிறைவேற்றும்” என்றும் கருத்து தெரிவித்தார். இதனால், இதுவும் இணையத்தில் வைரலானது.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாத நடிகர் எஸ்.வி சேகர், தனது கருத்தில் உறுதியாக இருந்ததோடு, தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாகச் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், நடிகர் எஸ்.வி சேகர் பேசியது தொடர்பாகச் சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்.வி சேகர் மீது புகார் அளித்தார். அந்த புகாரில், “நடிகர் எஸ்.வி.சேகர் மீது தேசியக் கொடியை அவமதித்து, தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், கலகத்தைத் தூண்டும் வகையில் பேசியதற்கும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி இருந்தார். 

இந்நிலையில், தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதுவும், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் பிரிவு 2 இன் கீழ் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

ஆனால், இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என்று பயந்த எஸ்.வி.சேகர், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

சென்ற முறை இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது, இது குறித்து எஸ்.வி.சேகர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “இந்து - முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையிலேயே தேசியக் கொடியில் காவி மற்றும் பச்சை நிறம் இடம் பெற்றுள்ளதாகக் காந்தியடிகள் கூறியிருந்த கருத்தையே தான் தெரித்ததாக”  கூறப்பட்டது.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக காவல் துறை தரப்பு, “இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதற்கு முன்னர் தான் காந்தியடிகள் இந்த கருத்தைத் தெரிவித்ததாகவும், அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னர், தேசியக் கொடியின் வண்ணங்களுக்கு உரிய விளக்கம் முறையாக அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதரீதியான கலவரத்தைத் தூண்டும் வகையில், அந்த நோக்கத்துடனேயே எஸ்.வி.சேகர் இந்த கருத்து கூறியதாக” தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தேசியக் கொடியை அவமதித்ததற்காகப் பகிரங்க மன்னிப்பு கேட்டு எதிர்காலத்தில் இது போன்ற செயலை செய்ய மாட்டேன் என்று, எஸ்.வி.சேகர் உறுதியளித்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தால், அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள மாட்டோம்” என்று, தமிழக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. 

இதனையடுத்து, இது குறித்து மனுத் தாக்கல் செய்ய எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

மேலும், “செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடிகர் எஸ்.வி.சேகருக்கரை கைது செய்ய மாட்டோம்” என்றும், தமிழக காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், விசாரணையின் போது எஸ்.வி.சேகர் கொடுக்கும் விளக்கத்தை பொறுத்தே அவரை கைது செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உட்பட ஐந்து பேர் மீது கோவை காட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியைப் பின்பற்றவில்லை உட்பட கொரோனா தடுப்பு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.