“தமிழகம் புதிய தொழில்களை நோக்கி செல்ல வேண்டும்” என்று, தொழில் முனைவோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இஸ்பாகான் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவில் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது” என்று, பெருமையோடு குறிப்பிட்டார். 

“அறிவுசார் கல்வி நிறுவனங்கள் இங்கு தான் அதிகம் உள்ளன என்றும், தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது” என்றும், கூறினார். 

“கல்வி, பொருளாதாரத்தில் மேன்மை அடைந்த மாநிலம் தமிழ்நாடு என்றும், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டுமே 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கிடைத்து உள்ளது” என்றும், முதல்வர் தெரிவித்தார்.

“சிறு நிறுவனங்களில் முதலீடு செய்வதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது” என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், “மேலும் புதிய தொழில்களை நோக்கியும் நமது எண்ணங்கள் செல்ல வேண்டும்” என்றும், கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, “நாம் கால மாற்றத்துக்கு ஏற்ப தொழில் துறையை மேம்படுத்த வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவும் வேறு பல புதிய உற்பத்தி முறைகளும் எல்லா துறைகளிலும் மாற்றங்களை நிகழ்த்தி உள்ளன” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“பெருந்தொற்று சூழலில் தொழில் நிறுவனங்கள் இயங்கும் முறையே மாறி இருக்கிறது” என்றும், முதலமைச்சர் குறிப்பிட்டு பேசினார்.

மேலும், “புத்துயிர் காப்பகங்கள், புத்துயிர் பூங்காக்கள் உருவாக்க செயல் திட்டம் உருவாக்கப்படும்” என்றும், முதலமைச்சர் உறுதிப்படத் தெரிவித்தார். 

முக்கியமாக, “தமிழ்நாட்டில் கணினி புரட்சியை ஏற்படுத்தியவை கலைஞர்” என்றம், முதலமைச்சர் புகழாரம் சூட்டினார். 

அத்துடன், “ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்ட ஆயிரக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் புதிய தொழில்முனைவோர் உருவாக வேண்டும்” என்றும் மு.க.ஸ்டாலின், கேட்டுக்கொண்டார்.