சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க, தமிழக அரசு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒப்பந்தம் மீஞ்சூர் மற்றும் நெம்மேலி பகுதிகளில் உள்ள நிலையங்களில், கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு, தலா, 10 கோடி லிட்டர் வீதம், தினமும், 20 கோடி லிட்டர் குடிநீர், விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, நெம்மேலியில், கூடுதலாக, 15 கோடி லிட்டர் உற்பத்தி திறன் உள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான, கட்டுமான பணிகள் நடக்கின்றன. மேலும், பேரூரில், 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் உடைய, கடல் நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்திற்கான, ஒப்பந்தம் கோரும் பணிகள் துவங்க உள்ளன.

இந்த இரு திட்டங்களையும், இன்னும் இரண்டு ஆண்டுகளில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வாரியம் திட்டமிட்டுள்ளது.கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள் வாயிலாக மட்டும், பொதுமக்களுக்கு தினமும், 75 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னையில் தற்போது, தினசரி, குடிநீர் தேவை, 85 கோடி லிட்டர். மாநகரின் ஒட்டுமொத்த தேவையானது, அடுத்த, இரண்டு ஆண்டுகளில், 95 கோடி லிட்டர் வரை, அதிகரிக்க வாய்ப்புள்ளது.மாநகரின் குடிநீர் தேவை, தற்போது பெரும்பாலும் ஏரிகளை சார்ந்தே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பருவமழை பொய்த்துப்போனால், ஏரிகள் வறண்டு குடிநீர் பஞ்சம் ஏற்படுவது, தொடர் கதையாகி வருகிறது.

இதனால், இன்னும் இரண்டு ஆண்டுகளில், கடல் நீரால், ஒட்டு மொத்தமாக, 75 சதவீத குடிநீர் தேவையை பூர்த்தி செய்து விட, வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.

மற்றொரு பக்கம், சென்னையில் விற்கப்படும் தண்ணீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள், குடிநீர் கேன்கள் மற்றும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து 187 மாதிரிகளை சேகரித்த சென்னை மாநகராட்சி அவற்றை ஆய்வுக்கு அனுப்பியது. அன்றாடம் மக்கள் அருந்தும் இந்த குடிநீரின் தரம் குறித்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.

ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட 187 மாதிரிகளில் 40 மாதிரிகள் குடிப்பதற்கு தரமற்றவை என்பது தெரியவந்தது. எஞ்சியுள்ள 147 மாதிரிகளில் 30-இல் பாக்டீரியா பரவல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 மாதிரிகள் போலியான நிறுவனங்களின் பெயரில் விற்கப்படுவதும் தெரிய வந்துள்ளது. இந்த விவரங்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம், சென்னை மாநகராட்சி தாக்கல் செய்துள்ளது.

இது போன்ற தரமற்ற நீரை அருந்துவதால் வயிற்றுப்போக்கு, காலரா, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் மக்கள், அதனோடு இலவச இணைப்பாக நோய்களை வாங்கி வரும் சூழலுக்கு ஆளாகாமல் தவிர்க்க, தரமற்ற நீரை விற்கும் தண்ணீர் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.