தாம்பத்தியத்திற்கு ஒத்துழைக்காத மனைவியைக் கணவர் எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் அருகேயுள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் 20 வயதான பானுரேகா, விருதுநகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி.ஏ.3 ஆம் ஆண்டு படித்து வந்தார். 

 virudhunagar wife murderfor husband arrest

இதனிடையே, பானுரேகாவிற்கும், இவரது மாமன் 26 வயதான ராஜ்குமாருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. 

இதனையடுத்து, ராஜ்குமார், திருப்பூரில் பனியின் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததால், மனைவி பானுரேகா தனது தந்தை வீட்டில் தங்கி கல்லூரி படிப்பைத் தொடர்ந்து வந்தார்.

இதனிடையே, கடந்த 16 ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற பானுரேகா மாலை வீடு திரும்பவில்லை. இதனால், மகளைக் காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, திருச்சி அடுத்த விராலிமலையில் காட்டுப் பகுதியில், இளம்பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்குச் சென்ற பார்த்த போலீசா், கொலை செய்யப்பட்டது பானுரேகா என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, பானுரேகாவின் வழக்கை துரிதப்படுத்தினர். 

அதன்படி, பானுரேகாவின் தோழிகளிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, பானுரேகா அவரது கணவருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அன்று பானுரேகா கல்லூரிக்குக் கூட வரவில்லை என்றும் தோழிகள் கூறியுள்ளனர்.

இதனால், பானுரேகாவின் கணவர் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் தங்களது பாணியில் ஸ்பெசலாக விசாரிக்கவே, அவர் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில், “திருமணம் ஆனதிலிருந்தே எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. குடும்ப வாழ்க்கையில் எங்களுக்குள் சரியில்லை. அதனால், கோபத்தில், விராலிமலைக்கு அழைத்துச் சென்று  மனைவியை எரித்துக்கொன்றேன்” என்று வாக்கு மூலம் அளித்துள்ளார்.

 virudhunagar wife murderfor husband arrest

இதனைத்தொடர்ந்து, ராஜ்குமாரை விராலிமலை காவல் துறையினரிடம், விருதுநகர் போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து, மனைவியைக் கொலை செய்யத் தாம்பத்திய பிரச்சனை மட்டும் தான் காரணமா? அல்லது வேறு எதுவும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் விராலிமலை போலீசார், தங்கள் பாணியில் ராஜ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, குடும்ப பிரச்சனை காரணமாகக் கணவனே, மனைவியை எரித்து கொலை செய்துவிட்டு, நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.