விருதுநகர் அருகே விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை இயங்க தடை விதித்து தொழிலக பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் - மதுரை எல்லைப் பகுதியான எரிச்சநத்தம் அருகே செங்குளம் பகுதியில், சிவகாசியை சேர்ந்த சண்முகநாதன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, ராஜேஸ்வரி என்ற பெயரில் இயங்கி வந்தது.

இந்த ஆலையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். நேற்று இங்கு திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், 2 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் பணி செய்து கொண்டிருந்த வேல்தாயி, அய்யம்மாள், லட்சுமி, காளீஸ்வரி சுருளியம்மாள் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காடனேரியைச் சேர்ந்த மகாலட்சுமி, லட்சுமி, சுந்தரமூர்த்தி ஆகியோர் படுகாயங்களுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி, மகாலட்சுமி ஆகிய இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார்.

இந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உயிரிழந்தோருக்குப் பட்டாசு ஆலை நிர்வாகத்தின் சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆலை நிர்வாகத்தின் சார்பில் இழப்பீடு வழங்கும் வரை உடலைப் பெற மாட்டோம் என்று அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகப் பட்டாசு ஆலை நிர்வாகத்தின் சார்பில் ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, முதற்கட்டமாக காளீஸ்வரி, லட்சுமி, சுருளியம்மாள், வேல்தாயி ஆகியோரின் உடல்கள் மட்டும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை இயங்க தடை விதித்து தொழிலக பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சிறிய ரக வெடிகள் தயாரிக்க இந்த ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் ஆனால் அதற்கு மாறாக பேன்சி ரக பட்டாசுகளைத் தயாரித்து வந்ததாகவும், விதிமீறல்கள் காரணமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தொழிலக பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டாசு ஆலையின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.