*******************
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார். அவருடைய சொந்த ஊரில் ஆகஸ்ட் 30-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. வசந்தகுமார் மறைவைத் தொடர்ந்து கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளது.

தற்போது கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட வேண்டும் என்ற குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக விஜய் வசந்த் எந்தவொரு பதிலுமே தெரிவிக்காமல் இருந்தார்.

இவர் தமிழ்த் திரையுலகில் நடிகராக உள்ளா விஜய் வசந்த், 'சென்னை 28', 'நாடோடிகள்', 'என்னமோ நடக்குது', 'சென்னை 28 பார்ட் 2', 'அச்சமின்றி', 'வேலைக்காரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 'மை டியர் லிசா' என்னும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே, மறைந்த வசந்தகுமாரின் 7-ம் நாளை அனுசரிக்கும் வகையில் கன்னியாகுமரியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் விஜய் வசந்த் கலந்து கொண்டார். மவுன ஊர்வலத்தின் இறுதியில் தேர்தலில் போட்டி குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:

"என்னுடைய தரப்பிலிருந்து எந்தவொரு முடிவுமே எடுக்கவில்லை. கட்சியிலிருந்து அப்பாவுக்குக் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாகச் செய்தார். கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதன்படிதான் செயல்படுவோம். தேர்தலில் நிற்பது தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. குடும்பத்துடன் ஆலோசித்துவிட்டுச் சொல்கிறேன்".

இவ்வாறு விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த தொகுதியில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியலில் விருப்பம் இருப்பதாக கூறி உள்ள விஜய் வசந்த், தற்போதைக்கு போட்டியிட விரும்பவில்லை என கூறியிருக்கிறார்.

மேலும் ``நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அப்பாவின் நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், காங்கிரஸ் உறுப்பினரான நான் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செய்வேன்" என்றும் விஜய் வசந்த் கூறினார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் போது பாஜக நிச்சயம் போட்டியிடும் என்று பாஜக மாநில துணைத் தலைவரும், கன்னியாகுமரி மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த  பாஜகவின் மாநில செயலர்கள்,  மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் தென் மண்டல மைய குழு கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.  

அப்போது பேசிய அவர், “சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணி வியூகங்கள், தனித்து போட்டி வந்தால் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி எப்படி செயல்படுவது என்பது  தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இப்போதும் கூட்டணியில் தொடர்ந்து வருகின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது  கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பது குறித்தும், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது குறித்தும் கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும்.  அதிமுக மற்றும் திமுகவைப் போலவே பாஜகவுக்கும் தமிழகத்தில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கிய பின்பு, பாஜகவுடன் கூட்டணிக்கு விரும்பினால் அதுகுறித்து கட்சித் தலைமை பரிசீலித்து செயல்படும்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் காலமாகிவிட்ட சூழலில் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தினால் அங்கு  பாஜக நிச்சயம் போட்டியிடும். மேலும், பாஜகவின் வேட்பாளர் தாமரை சின்னத்தில் வெற்றி பெறுவது உறுதி. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமை எனக்கு வாய்ப்பு அளித்தால் போட்டியிட தயாராகவுள்ளேன். மத்திய அரசு  நிதி நிலைமைக்கு ஏற்ப பாரபட்சமின்றி தமிழகத்திற்கான நிதியை வழங்கி வருகிறது." என்றார்.

கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்ததையடுத்து 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரைவில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.