முரளிதரன் எனும் நடிகர்.. விஜய் சேதுபதி என்னும் கலைஞன்.. அரசியல் பேசும் சினிமா.. புலிக்கொடி அல்ல.. போர்க்கொடி தூக்கும் பிரபலங்கள் என்று தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் கடந்த சில நாட்களாக வைரலாகி வரும் கருத்து யுத்தம் இது.

இலங்கை தமிழரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு கதையானது, “800” என்ற தலைப்பில் தமிழ் மொழியில் திரைப்படமாகிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. பிரச்சனையே இங்கு தான் 
இருக்கிறது.

இலங்கை தமிழராகவே இருந்தாலும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரின் போது, “தான் தமிழன் என்பதை மறந்து, அவர் இலங்கை பக்கம் அதுவும் சிங்களர்கள் பக்கம் நின்று, அதை நியாயப்படுத்திப் பேசவும் செயல்படவும் செய்ததாக” கடும் விமர்சனங்கள் எழுந்தன. அத்துடன் “இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின், தனியொரு சாதனை மனிதன் கிடையாது. அவர் தன் சுயநலம் சார்ந்து தன்னுடைய விளையாட்டு வாழ்க்கைக்காக, சுயநலமாக யோசித்து தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய ஈழ தமிழ் அழிப்பு இனப்படுகொலையை ஆதரித்துப் பேசி, தமிழர்களுக்கு மிகப் பெரும் இன துரோகம் செய்து, தமிழ் இனத்தில் துரோகியாகி விட்டார்” என்ற கருத்துக்கள் பலராலும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு 
வருகிறது.

முக்கியமாக, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை, “முரளிதரன் எனும் நடிகர்” என்றே பலரும் பலவிதமாக வசைப்படி வருகின்றனர். இதில், திசை தெரியாமல் நிற்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

அதே நேரத்தில், நடிகர் விஜய் சேதுபதி “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது தொடர்பாகக் கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற கதை விவாதத்தின் போதே, பல வெளிநாட்டு வாழ் தமிழர்களும், உலகம் முழுவதும் பரவி இருக்கும் இலங்கை வாழ் தமிழர்களும், நடிகர் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டும், அவருக்கு மின்னஞ்சல் உள்ளிட்ட பல விதங்களிலும் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று, தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல், விஜய் சேதுபதி உடன் தொடர்பில் உள்ள அவருக்கு நெருக்கமானவர்களிடம் பலரும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து, அந்த கதையில் இருந்து அவரை பின்வாங்கும் படி கூறி வந்தனர். 

ஆனால், முத்தையா முரளிதரனின் புறம் சார்ந்த சிரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நெக்குருகிப் போய் நடிக்க சம்மதம் தெரிவித்து நடிக்கவும் செய்து உள்ள நிலையில், தற்போது சேற்றில் சிக்கிய செந்தாமரையைப் போல் பலரால் பார்க்கப்பட்டு வருகிறார்.

இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்றால், “எதிர்ப்பு என்பது முத்தையா முரளிதரனுக்கு தான், ஆனால் வாரி இறைக்கப்படும் சேறும், சகதியும் நடிகர் விஜய் சேதுபதி மேல் படுவது தான், அனைவருக்கும் வருத்தம். ஆனால், இப்படி விஜய் சேதுபதி மேல் சேறும், சகதியும் படுகிறதே என்று அவர் மேல் அன்பு கொண்ட, அக்கரைக்கொண்ட, அவரைப் பிடித்த சாமானிய ரசிகன் முதல், சாதித்த பிரபலங்கள் வரை காட்டும் அக்கறை மட்டும், இன்னமும் நடிகர் விஜய் சேதுபதிக்கு புரியவே இல்லை என்பது தான் பெரும் துயரம்.

ஒரு வேளை நடிகர் விஜய் சேதுபதிக்கு பொது மக்கள், தமிழ் இனமானவர்கள் மற்றும் உணர்வாளர்கள் கூறும் கருத்துக்கள் புரிந்திருந்தால், அவர் மனதுக்குச் சென்று சேர்ந்திருந்தால், அவர் இந்நேரத்திற்கு விளக்கம் கொடுத்திருப்பார். அல்லது, அந்த படத்தில் இருந்து அவர் பின்வாங்கி இருப்பார். ஆனால், அது எதையுமே விஜய் சேதுபதி இந்த நிமிடம் வரை செய்யவே இல்லை. 

“தாமதமாகக் கிடைக்கும் நீதி கூட அநீதி” என்று கூற்று உண்மை என்றால், இப்படி விஜய் சேதுபதியின் ஒட்டு மொத்த அபிமானிகளும் தெரிவித்துள்ள எதிர்ப்புக்குக் கூட அவர் எந்த வித விளக்கமும் கொடுக்காமல் அமைதியாக இருப்பது கூட, முத்தையா முரளிதரன் தமிழ் இனத்திற்கு செய்த துரோகத்திற்குப் பங்கு தாரராக இணை சேர்கிறார் என்பது தான் பொருள். இந்த பேருண்மையை நடிகர் விஜய் சேதுபதி இன்னும் உணரவில்லையா? 

“முத்தம் கொடுத்து, முத்தம் பெற்ற ரசிகனுக்காக” முன் வச்ச காலை விஜய் சேதுபதி, பின் வாங்க மாட்டாரா? 

நடிகர் விஜய் சேதுபதி, தன் ரசிகனுக்குக் கண்ணத்தில் கொடுத்து வைத்த முத்தத்தில் பதிந்துபோன எச்சிலைக் கண்டு பெருமைப்பட்டுக் கொண்டாடிய ரசிகன், தற்போது அந்த எச்சில் பதித்து வைத்துப் போன தடயங்களை.. அதே ரசிகன் அறுவறுப்போடு அழிக்க முற்படுவது தகுமோ? இல்லை, அதைத் தான் விஜய் சேதுபதி எதிர்பார்க்கிறரா?

“நேற்று வரை ரசிகனுக்காக நடித்து வந்த விஜய் சேதுபதி, இன்று மட்டும் ஏன் சுயநலத்தோடு செயல்பட்ட வேண்டும்? 

தமிழ் இன துரோகிக்காக அந்த துரோகியின் கதாபாத்திரத்தைச் ஏன் சுமக்க வேண்டும்?

“அப்படி ஒட்டு மொத்த எதிர்ப்பையும் தாண்டி, “800” படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி வாழ்ந்தால்.. அது “எட்டப்பன் கதையாகி விடாதா?” இந்த உண்மை கூட விஜய் சேதுபதிக்கு தெரியவில்லையா? “கூடவே இருக்கம் செவ்வாள இதைக்கூடப் புரிய வைக்காமல் இருந்திருப்பார்களா என்ன?” 

“மக்கள் செல்வன்” பட்டம் இருக்கும் போது, “எட்டப்பன்” பட்டத்தை ஏன் தானாகத் தேடிச் சென்று விஜய் சேதுபதி ஏற்க வேண்டும்?”

“விஜய் சேதுபதிக்கு என்னாச்சு?”

இவையெல்லாம் கேள்விகள் அல்ல. விஜய் சேதுபதியின் மீது பக்திகொண்ட ரசிகர்கள் எழுப்பியிருக்கும் ஆதங்கம். தமிழ் உணர்வாளர்கள் ஒரு உண்மையான கலைஞனிடமிருந்து எதிர்பார்க்கும் குறைந்தபட்ச கலை நியாயம். கலை உணர்வு. உணர்ச்சி. அறம். நீதி என்று எது சொன்னாலும் அது தகும்.

இப்போதே மவுனம் கலைத்து விடுங்கள். இல்லையென்றால்..

“விஜய் சேதுபதி, நீங்கள் தமிழனா? தமிழ் இன துரோகியா?” என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல ஆளாகி விடாதீர்கள். ப்ளீஸ்..