இரு சிறுநீரகமும் செயலிழந்த ஏழை சிறுவனுக்கு, வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முதல்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி, நடிகர் விஜய் சென்னை பனையூர் அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.  இந்த சந்திப்பின்போது நடிகர் விஜய், மக்களுக்கான நற்பணிகளைச் செய்யுமாறு இயக்கத்தினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த சூழலில் வேலூரில் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவியுள்ளனர்.

வேலூர் மாவட்டம், சலவன் பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன். அவரது மனைவி கலா. இந்த தம்பதியினரின் மூத்த மகன் ரவி. சரவணன் சாஸ்திரி நகரில் தள்ளுவண்டி வைத்து சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இவரின் மகன் ரவி, குழந்தைப் பருவத்திலிருந்தே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். நாளடைவில் இந்த பாதிப்பு முற்றி ரவிக்கு இரு சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. அவரது பெற்றோர் வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அடிக்கடி அதிக பணம் செலவு செய்து டயலசிஸ் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதற்காக இதுவரை பெற்றோர் தங்களது சொந்த செலவில் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டுள்ளனர். இந்த சூழலில் மருத்துவர்கள் ரவிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். இதற்காக 12 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.

மகனுக்காக தங்களது சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்த இந்த ஏழை பெற்றோரிடம் அதற்காகச் செலவு செய்யப் பணவசதி இல்லை. எனவே, அரசு சார் அமைப்புகளையும், சில தொண்டு நிறுவனங்களையும் உதவிக்காக அவர்கள் நாடி வந்தனர். இந்த சூழலில் வேலூர் விஜய் மக்கள் இயக்கத்தினர், ரவியின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ளனர். வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் வேல்முருகன், ரவியின் மருத்துவச் செலவுக்காக முதல் கட்டமாக ரூ. 1லட்சத்தை அவரது பெற்றோரை சந்தித்து வழங்கியுள்ளார். அதோடு தங்களால் முடிந்த அளவு மருத்துவச் செலவுக்கான தொகையை விஜய் மக்கள் இயக்கம் மூலம் திரட்டி ரவியின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவ இருப்பதாகவும் ரவியின் பெற்றோரிடம் உறுதியளித்துள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.