“உன் கர்ப்பத்துக்கு நான் காரணமல்ல” என்று கூறி கழற்றி விட்ட காதலனுடன் சேர்த்து வைக்க கோரி காவல் நிலையம் முன்பு காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள மகமதுபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் 19 வயது மகள் சினேகா, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 வரை படித்து விட்டு, தற்போது வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வருகிறார். 

இதனிடையே, இளம் பெண் சினேகாவும் அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய அத்தை மகனான 24 வயதுடைய சுதனும், கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். 

அத்துடன்,  சுதன் - சினேகா இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள பல இடங்களுக்கும் ஜோடியாக சேர்ந்து ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. சுதன் சமீப காலமாகச் சென்னையில் தங்கி திரைப்படங்களுக்குப் பின்னணி இசை சேர்க்கும் பிரிவில் சேர்ந்து சவுண்டு என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

சுதன் சென்னைக்குச் சென்ற தொடக்கத்தில், சுதன் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து படம் எடுக்க உள்ளதாகவும், இந்த படத்தில் கதாநாயகனின் தங்கையாக நடிக்க வைப்பதாகவும் காதலி சினேகாவிடம் ஆசை வார்த்தைகள் கூறி சுதன், அழைத்துள்ளார். 

சிநேகாவும், “காதலன் தானே அழைக்கிறான்” என்று, வருகிறேன் என்று கூறி இருக்கிறார். அதன் படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊருக்கு வந்த சுதன், சிநேகாவை சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

சென்னை சென்றதும், திருமணம் செய்து கொள்வதாக மேலும் சில ஆசை வார்த்தைகளைக் கூறி சினேகாவுடன், சுதன் உல்லாசமாக இருந்தாக கூறப்படுகிறது. சிநேகாவும், திருமணம் செய்துகொள்பவர் தானே என்று, நம்பி தம்மையே அவர் சுதனிடம் ஒப்படைத்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக, சினேகா கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.

“நான் கர்ப்பமாக இருக்கிறேன்” என்று சுதனிடம், சினேகா தெரிவித்துள்ளார். இதனால், “என்னைக் கூடிய சீக்கிரமே திருமணம் செய்து கொள்” என்றும், அவர் சுதனை வற்புறுத்தி உள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுதன், “சரி, திருமணம் செய்துகொள்கிறேன்” என்று கூறி உள்ளார். அதன் பிறகு, அவர் காலம் கடத்தி வந்ததாகத் தெரிகிறது. 

“தான் கர்ப்பமாக இருப்பது வீட்டில் தன் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்குத் தெரிந்து விடுமோ என பயந்த சிநேகா, சுதனை உடனடியாக திருமணம் செய்துகொள்ளும் படி அடிக்கடி வற்புறுத்தி உள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சுதன், “உன் கர்ப்பத்துக்கு நான் காரணம் அல்ல, என்னை வந்து தொந்தரவு செய்யாதே. உன்னைத் திருமணம் செய்ய மாட்டேன்” என்று, சத்தம் போட்டு சண்டையும் போட்டு விரட்டி அடித்துள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிநேகா, இது குறித்து தன் பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனைக் கேட்டு இன்னம் அதிர்ச்சியடைந்த சினேகாவின் பெற்றோர், தன் மகளை வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார் அளித்தனர். ஆனால், சுதன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால், இன்னும் விரக்தி அடைந்த சினேகா, தனது பெற்றோருடன் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து, திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக, காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இளம் பெண்ணின் தர்ணா போராட்டம் குறித்து அதிர்ச்சியடைந்த போலீசார், சிநேகா மற்றும் அவரது பெற்றோரை அழைத்து, சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். 

அப்போது, சினேகா தனது காதலனுடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, சென்னையில் இருக்கும் சுதனை போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்காக அடுத்த 4 

நாட்களுக்குள் காவல் நிலையத்திற்கு நேரில் வர வேண்டும்” என்று, போலீசார் வலியுறுத்தினர். அப்போது, அவரும் வேலூர் வருவதாகக் கூறியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, போராட்டத்தை கை விட்டு  சினேகா மற்றும் அவரது பெற்றோர் வீடு திரும்பினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.