13 வயது சிறுமிக்கு 33 வயது இளைஞருடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டையில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி, அந்த பகுதியில் அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.

இந்நிலையில், அந்த 13 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் நடத்தி வரும் 33 வயது நபர் ஒருவருக்கும் அக்டோபர் 26 ஆம் தேதி திருமணம் நடத்த இரு வீட்டாரின் பெற்றோரும் முடிவு செய்தனர். இந்த திருமணம் விசயம் பற்றி இரு வீட்டார் பெற்றோரும் ரகசியமாகவே பாதுகாத்து வந்தனர். 

மேலும், அந்த 13 வயது சிறுமிக்கு 19 வயது என போலிச் சான்றிதழ் பெற்று, இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். 

ஆனால், இது குறித்து தகவல் வெளியே கசிந்து உள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த சிலர், வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ரகசியமாகத் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து, வேலூர் சமூக நலத்துறை மற்றும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினர் கொசப்பேட்டை பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அதன் தொடர்ச்சியாக, சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், அங்கிருந்த சிறுமியை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு, குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்னர், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. 

இந்த விசாரணையில், “13 வயது சிறுமிக்கு 19 வயது என போலிச் சான்றிதழ் பெற்றிருப்பதும்” கண்டுபிடிக்கப்பட்டது. போலிச் சான்றிதழ் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், “சிறுமிக்கு 13 வயது என்பதால், திருமணம் செய்தால் சட்ட ரீதியாகப் பிரச்சனை ஏற்படும் என்பதை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த அரசு மருத்துவரிடம் சிறுமிக்கு 19 வயது என போலியாக சான்றிதழ் பெற்று அதன் மூலமே வேலூர் மாநகராட்சியில் 13 வயது சிறுமிக்கு 19 வயது என போலியாகப் பிறப்புச் சான்றிதழை வாங்கி உள்ளதும்” கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும், இந்த போலிச் சான்றிதழ் மூலம், சிறுமிக்கு ஆதார் அட்டைக்காகவும் விண்ணப்பம் செய்து உள்ளனர். இதனையடுத்து, போலி சான்றிதழ் வாங்கியது தொடர்பாக வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது. 

இந்தப் புகார் மீது வேலூர் மாவட்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், பெரம்பலூர் அருகே சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

பெரம்பலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், வேலை செய்து வந்தார். இதனையடுத்து, கடந்த 26 ஆம் தேதி வேலைக்குச் சென்ற சிறுமி திடீரென்று மாயமாகி உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை பல இடங்களில் தேடிப் பார்த்து விட்டு, கடந்த 26 ஆம் தேதி முதல் சிறுமியை காணவில்லை என்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து, அந்த இளைஞரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.