தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் தேர்வானவர்களின் சாதி ரீதியிலான புள்ளிவிவரங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அளிப்பது தொடர்பான வழக்கு ஒன்றில், 'கல்விச் சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிடுவதை நீக்கினால் 2050க்குள்ளாவது சாதி ஒழியும். சான்றிதழில் சாதிப்பெயரை நீக்கினால் தமிழக மக்கள் சாதி, மத பாகுபாடின்றி ஒரே குடையின் கீழ் நிற்பர். தகவலை வெளியிட்டால் சாதி பிரச்சனை வரும் என டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அச்சப்படுவது மாயை, கற்பனையானது. அந்த அச்சம் உண்மை என்றால் டி.என்.பி.எஸ்.சி.யும், தமிழக அரசும் சாதி ரீதியான இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்' என்று இருதினங்களுக்கு முன் சென்னை நீதிமன்றத்தில் நீதிபதி வைத்தியநாதன் கூறியிருந்தார்.

இதற்கு திராவிடர் கழகத் தலைவர் தற்போது அறிக்கை வடிவில் கி. வீரமணி பதிலளித்துள்ளார். இன்று (செப்டம்பர் 9) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுவாக வழக்குகளை விசாரிக்கும்போது நீதிபதிகள் தங்கள் சொந்தக் கருத்துகளைக் கூறுவதும், அதை ஊடகங்கள் விளம்பரப்படுத்துவதும் சரிதானா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.

அரசமைப்புச் சட்டப்படிதான் தற்போதுள்ள இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை முதன்முதலில் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே உருவாக்கியது திராவிடர் இயக்கமோ, மாநில அரசுகளோ அல்லது சட்டத் திருத்தங்கள் மூலம் செயல்படுத்திவரும் மத்திய அரசோ அல்ல. பின் யார்? மனுதர்மம்தானே காரணம்?

மனுதர்மம்தான் அதனைச் செய்தது என்பது மறுக்க முடியாத உண்மை. ஜாதிகளைப் பிரசவித்தார் பிரம்மா; தனது தலையில் பிராமணனையும், தோளில் க்ஷத்திரியனையும், தொடையில் வைசியனையும், காலில் சூத்திரனையும், (பஞ்சமர், பெண்கள் அவர்ணஸ்தர்கள் - Out Castes) என்றும், இவர்களில் கல்வி, அதன் காரணமாக உத்தியோகம் பிராமணனுக்கே என்றும்; மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் பொறாமையின்றி குற்றேவல் செய்வது சூத்திரர்களின் கடமை என்றும் பிரித்து இட ஒதுக்கீட்டை உருவாக்கியது மனுதர்மம்தானே?

அந்தப் பாதிப்பின் காரணமாகத்தானே, நாட்டின் மிகப்பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்களான ‘சூத்திரர்கள்’, ‘பஞ்சமர்கள்’, ‘பெண்கள்’ தங்களது உரிமைகளான கல்வி, வேலை வாய்ப்பைப் பெற முடியாத நோயின் கொடுமையிலிருந்து மீளும் சிகிச்சை முறைதானே இட ஒதுக்கீடு என்பது. பந்தியில் பசியேப்பக்காரர்களை வெளியே நிறுத்திவிட்டு, பட்டினி போட்டு கொன்ற கோரக் காட்சியை மாற்றி, புளியேப்பக்காரர்களே மீண்டும் மீண்டும் அமர்ந்து அஜீரணமாகும் வண்ணம் விருந்தைச் சாப்பிடுவது நியாயமா? ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது’ என்ற மனுவின் அதர்மத்திலிருந்து மீட்கப்படுவதற்கே கடந்த 100 ஆண்டுகளுக்குள் இந்த இட ஒதுக்கீடு - இருந்தாலும் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் போதுமான அளவில் கிடைக்கவில்லையே! இந்த வரலாற்றை மாண்பமை நீதிபதி அறியாதவராக இருக்க முடியாதே!” 
அதுமட்டுமா? இந்த இட ஒதுக்கீட்டின் தேவை என்பதால், ஜாதி இதனால் பாதுகாக்கப்படுகிறதே என்பது அவரது கவலையானால், அவர் எதைப் பரிந்துரை செய்திருக்கவேண்டும்? அல்லது கூறியிருக்கவேண்டும்? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘ஜாதி ஒழிக்கப்படுகிறது’ என்ற அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து, 17 ஆவது பிரிவில் உள்ள ‘தீண்டாமை’ என்ற சொல்லுக்குப் பதில் ‘‘ஜாதி’’ என்று போட்டு, ஜாதி ஒழிக்கப்படுகிறது. ஜாதியோ, ஜாதிச் சின்னமோ நாட்டில் எங்கும் இனி இருக்கக் கூடாது என்று சட்டத்தை அவசரமாகக் கொண்டு வரவேண்டும்; ‘சுதந்திரம்‘ பெற்று 73 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், பிராமணன் - சூத்திரன் - பஞ்சமன் என்று கூறலாமா? கேரளாவில் நடைபெற்ற பிராமணர்கள் மாநாட்டில் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியே பங்கு கொண்டு முழங்கியது உண்டே! சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் அந்த பிராமணர்கள் சங்க மாநாட்டில் பங்கேற்றுள்ளாரே!

ஜாதி ஒழிப்பைத்தான் இட ஒதுக்கீடு கோரும் நாம் விரும்புகிறோம். ஜாதி ஒழிப்பு இலட்சியம் - இலக்கு. அதை அடையும்வரை ஏற்றத் தாழ்வு, ஜாதிக் கொடுமையால் ஏற்பட்ட கல்வி, உத்தியோக வாய்ப்புக் கேட்டினை சரிப்படுத்தவே - மேடு பள்ளங்களை சமப்படுத்தவே - இடைக்காலத் தீர்வாக, ஏற்பாடாகத்தான் இந்த இட ஒதுக்கீடு. பாலம் கட்டி முடிக்கும்வரை பயணங்கள் மாற்றுப் பாதையில் (Diversion Road) தானே செல்ல முடியும்?

எவ்வளவு காலத்திற்கு இந்த மாற்றுப் பாதைப் பயணம்?’’ என்று கேட்டால், அதற்கு ஒரே பதில், எவ்வளவு விரைவில் பாலம் கட்டி முடிக்கப்படுகிறது (ஜாதி சட்டப்படி ஒழிக்கப்படுகிறது) என்பதைப் பொறுத்ததுதானே!

ஜாதி ஒழிக்கப்பட்டால் 2040 இல் கூட இட ஒதுக்கீடு போய்விடும்! ஏற்கெனவே உச்சநீதிமன்றம் 2010 லேயே (பத்தாண்டுகளுக்கு முன்பே)

State of Uttar pradeshVs Ram Sajivan (AIR 2010 s.c. 1738) என்ற வழக்கில் ஜாதியை ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை வற்புறுத்தியும், 10 ஆண்டுகளாக எந்த அரசும் கண்டு கொள்ளாதது ஏன் என்ற கேள்வி அல்லவா மய்யப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்?” 

இவ்வாறு கேள்வி கேட்டிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.