உத்தரப் பிரதேச மாநிலத்தில் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழந்துள்ள நிலையில், 17 வயது பட்டியலின சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார கொடூர கொலை வழக்கு, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் அனைத்து எதிர்க் கட்சிகளும் தங்கள் சார்பில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்த சம்பவத்தின் வடு கூட மறையாத நிலையில், அந்த மாநிலத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து வருவது, நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தி வருகிறது. இதனால், உத்தரப் பிரதேச மாநிலம் பாலியல் பலாத்காரத்தின் கூடாரமா? என்ற கேள்விகளும், சமூக வலைத்தளங்களில் எழுந்து உள்ளது. 

ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார செய்யப்பட்டு, அந்த பெண் கடுமையாகத் தாக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக அந்த பெண் உயிரிழந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அந்த மாநிலத்தில் அடுத்தடுத்து 3 பாலியல் பலாத்கார சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்திருப்பது தான், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹத்ராஸ் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச அரசு பிரமாண பத்திரம் இன்று தான் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், அதற்குள், அதே போலவே ஒரு சம்பவம் அச்சு அசல் அப்படியே நடந்திருக்கிறது. அதாவது உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வயது சிறுமி தற்போது உயிரிழந்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியை பூர்வமாகக் கொண்ட 6 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். அப்போது, அவரது தாய் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த 6 வயது சிறுமி, அங்குள்ள இக்லாஸ் என்ற பகுதியில், தனது உறவினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தனது உறவினரின் மகன் 17 வயது மதிக்கத் தக்க சிறுவன் ஒருவனால், அந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்குள்ள அரசு மருத்துவர்களின் அறிவுரையின் பேரில், அந்த சிறுமி டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிறுமிக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களாகச் சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், லக்னோ அருகே 17 வயது பட்டியலின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் கடந்த 4 ஆம் தேதி 17 வயது மதிக்கத்தக்கப் பட்டியலின சிறுமி ஒருவர், அவரது வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட அதே ஊரைச் சேர்ந்த சந்திரகேஷ் வர்மா என்ற இளைஞர், அந்த பெண்ணின் வீட்டின் மாடி வழியாக ரகசியமாக அந்த வீட்டிற்குள் நுழைந்து, தூங்கிக்கொண்டு இருந்த அந்த 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி உள்ளார்.

இதனால், கண் விழித்த பார்த்த அந்த சிறுமி, அலறித் துடித்து சத்தம் போட்டு உள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் ஓடி வந்து வந்து உள்ளனர். அப்போது, சந்திரகேஷ் வர்மா சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துகொண்டிருப்பதைப் பார்த்து, கையும் களவுமாகப் பிடித்தனர். 

இதனையடுத்து, அந்த பகுதி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்து உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இரு தரப்பினரையும் காவல் நிலையம் வரவைத்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சந்திரகேஷ் வர்மா, அங்கிருந்து தப்பியோடி உள்ளார். 

மேலும், தப்பி ஓடிய சந்திரகேஷ் வர்மா மீது சிறுமியின் தாயார் மேலும் ஒரு புகார்  கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சந்திரகேஷ் வர்மாவை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியை, குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

அதே போல், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 4 குழந்தைகளின் தாய் ஒருவர் 4 பேரால் கடத்தப்பட்டுக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராகத் தொடர்ந்து பாலியல் பலாத்கார சம்பங்கள் நடைபெற்று வருவது, அந்த மாநில பெண்கள் மத்தியில் பீதியும், அதிர்ச்சியும் ஏற்பட்டு உள்ளது.