போலீஸ் எஸ்.ஐ. உள்பட 4 பேரை திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், அரசு வேலை வாங்கித்தருவதாக அமைச்சர்கள் பெயரை பயன்படுத்தி 10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 63 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் அடுத்து உள்ள தொருவளுர் சிறுவயல் பகுதியை சேர்ந்த சிவசங்கரன் என்பவரது மகன் 22 வயதான விஜய் என்பவரிடம், அவர்களின்  உறவினரான கரூரை சேர்ந்த 24 வயதான சவுமியா என்ற  இளம் பெண், 13 பவுன் தங்க நகைகளை வாங்கி இருக்கிறார். நீண்ட நாட்கள் ஆகியும், அந்த நகையை அவர் திருப்பி தராமல் இருந்ததால், அந்த நகைகளை அந்த உறவினர் திருப்பி கேட்டு உள்ளார்.

அப்போது, “எனக்கு சில அமைச்சர்களைத் தெரியும் என்றும், உனது தம்பிக்கு நான் அரசு வேலை வாங்கித் தருகிறேன்” என்றும், அவர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய 22 வயதான விஜய், தனது தம்பி தனுஷ் என்பவருக்கு வேலை வாங்கித் தருமாறு கேட்டிருக்கிறார். இந்த வேலைக்காக, சவுமியாவிடம் மேலும் 75 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார்.

அத்துடன், விஜயின் உறவினரான விஸ்வா, பாலமுருகன் ஆகியோருக்கும் அரசு பஸ் டெப்போவில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, தலா 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றிருக்கிறார்.

அந்த சம்பவத்தில், ராமநாதபுரம் அருகே உள்ள சிறுவயலை சேர்ந்த 25 வயதான சதீஷ் என்பவர், அந்த பெண்ணுடன் உடந்தையாக இருந்திருக்கிறார்.

மேலும், இந்த சதீஷ் மூலமே இளம் பெண் சவுமியாவுக்கு பணம் சென்று உள்ளது. இதனையடுத்து, ஏற்கனவே பணம் பெற்ற அதே நபர்களிடம் இவர்கள் இருவரும் சேர்ந்து, மேற்கொண்டு 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வாங்கி உள்ளனர். ஆனால், அவர்கள் சொன்படி, அரசு வேலை வாங்கித்தராமல் அப்படியே ஏமாற்றி உள்ளனர்.

இதனால், ஏமாற்றம் அடைந்த உறவினரான விஜய், “நான் கொடுத்த பணம் மற்றும் நகைகளைத் திருப்பித்தருமாறு” கேட்டிருக்கிறார். 

அதற்கு, “பணத்தினை அமைச்சர்களிடம் நான் கொடுத்து விட்டேன் என்றும், அவர்கள் வேலை வாங்கி தந்துவிடுவார்கள்” என்றும், அவர் கூறி மேலும் சில காலம் கடத்தியிருக்கிறார்.

இதனால், இன்னும் சில நாட்கள் காத்திருந்து, மீண்டும் அவர் பணம் கேட்டபோது, இதே பதிலையே மீண்டும் அவர் சொல்லியிருக்கிறார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்தகோண்ட விஜய், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “சவுமியா மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் வேறு மாவட்டங்களில் மேலும் பலரிடம் இது போன்று மோசடி செய்தது” தெரிய வந்தது. 

இப்படியாக, மொத்தம் 6 பேரிடம் 63 பவுன் நகைகள் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு, ஏமாற்றியது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரும் சேலம் சின்னதிருப்பதி பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.

இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “இவர்கள் இருவரும் கோவை, ராமநாதபுரம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இப்படியான மோசடியை அரங்கேற்றியது” தெரிய வந்தது. 

குறிப்பாக, தங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக, வேலை கேட்டு வரும் இளைஞர்களைத் தனது காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரை ரகசிய திருமணமும் செய்து கொண்டு, அவர்களுடன் குடும்பமும் நடத்திய வந்தது” போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. 

முக்கியமாக, “இந்த மோசடி தொடர்பாக இது வரை 4 பேரை திருமணம் செய்துள்ளதாகவும், அதில் ஒருவர் போலீஸ் எஸ்.ஐ. யாக தேர்வாகி, பயிற்சியில் உள்ளவர் என்பதும்” போலீசாரின் இந்த விசாரணையில் தெரிய வந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், கைதான சவுமியா, சதீஷ் ஆகிய 2 பேரையும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப் படி, சவுமியாவை மதுரை சிறையிலும், சதீசை விருதுநகர் சிறையிலும் போலீசார் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.