கல்லூரி மாணவியின் காதலை தாயார் எதிர்த்ததால், காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயை மகளே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்து உள்ள விஜயநகரம் மாவட்டத்தின் சவரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த இளம் பெண், அங்குள்ள சவரவள்ளி ரூபாஸ்ரி பி பார்ம் படிக்கும் மாணவி ஆவார். 

அந்த மாணவி படித்துக்கொண்டு இருக்கும் போது, அந்த பகுதியைச் சேர்ந்த வருண் சாய் என்ற இளைஞரை அவர் காதலித்து வந்து உள்ளார். இதனால், காதலர்கள் இருவரும், அந்த பகுதியின் பல்வேறு இடங்களில் காதல் ஜோடிகளாக ஊர் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக காதலர்கள் இருவரும் ஊர் சுற்றி வந்த போது, இந்த விசயம் எப்படியோ அந்த மாணவியின் தாயார் லட்சுமிக்கு தெரிய வந்துள்ளது. இதனை கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் தாயார், மாணவி மாலையில் வீட்டிற்கு வந்ததும், அவரிடம் இது குறித்து விசாரித்து உள்ளார்.

அதற்கு, அந்த மாணவியும், “ஆமாம், நான் காதலிக்கிறேன். அவனையே தான் திருமணம் செய்துகொள்வேன்” என்று, உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் லட்சுமி, மகளின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டு, காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 

இதனால் தாயார் லட்சுமி மீது, அவரது மகள் கடும் கோபத்தில் இருந்து வந்தார். 

அத்துடன், “தாயார் தமது காதலுக்கு தடையாக இருக்கும் விசயத்தை“ அந்த மாணவி, தனது காதலனிடம் கூறியிருக்கிறார். அப்போது, “உன் தாயை கொன்றால் என்ன?” என்று, காதலன் கேட்டுள்ளார். அதன் படியே, காதலனும் சேர்ந்து, பெற்ற தாயை, கொலை செய்ய முடிவு செய்து அவரது மகளே திட்டம் போட்டிருக்கிறார்.

அதன் படி கடந்த 6 ஆம் தேதி இரவு தாயார் லட்சுமி தனது வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது, கூடவே அவரது மகளும் தூங்குவது போல் உடன் படுத்துக்கொண்டு இருந்து உள்ளார்.

அந்த நேரம் பார்த்து, அந்த இளம் பெண்ணின் காதலன் அங்கு வந்துள்ளான். அதன் பிறகு, இருவரும் சேர்ந்து பெற்ற தாய் என்றும் பார்க்காமல் லட்சுமியின் கழுத்தை நெரித்தும், மூக்கை மூடியும் கொடூரமாக கொலை செய்து உள்ளனர். இதில், தாயார் லட்சுமி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காலையில் விடுத்ததும், “எனது தாயார் திடீரென மூச்சு திணறி இறந்து விட்டதாக” அவரது மகள் கூறியிருக்கிறார். ஆனால், அக்கம் பக்கத்தினர் உயிரிழந்ததாகக் கூறப்படும் லட்சுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “காதலுக்குத் தடையாக இருந்ததால், பெற்ற மகளே தாயை கொன்றது” தெரிய வந்தது.  

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், தாயை கொன்ற மகளையும், அந்த பெண்ணின் காதலனையும் அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம். அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.