கடந்த ஆண்டு, நடிகர் பார்த்திபன் இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் மட்டும் ஒற்றை ஆளாய் நடித்தது, தமிழ் திரை உலகில் அனைவராலும் பாராட்டப்பட்டது.  

சில மாதங்களுக்கு முன்பு இத்திரைப்படம் கோவாவில் நடைபெற்ற  திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, பாரட்டைப் பெற்றது. அதன்பின், மத்திய அரசு விருது அறிவித்தது. இதற்கான அறிவிப்பு அண்மையில் அரசிதழில் வெளியானது. இதனடிப்படையில் பார்த்திபனுக்கு சமூக தளங்களில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த நிலையில்... சில விமர்சனங்கள் வந்தன.
 
அதுகுறித்த செய்தியைப் பகிர்ந்த தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், 'அண்ணனுக்கு பாஜகவில் ஒரு சீட்டு பார்சல்' என்று கிண்டலுடன் விமர்சித்திருந்தார். இதனைக் கண்ட பார்த்திபன் மிகவும் வருத்தமடைந்தார். 
இதையடுத்து திமுக எம்.பி. மீது கடுமையான விமர்சனங்கள் சமூக தளங்களில் எழுந்தன. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் பார்த்திபன் தனது சமூக தளபக்கத்தில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். மேலும், பார்த்திபன், தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்பதனையும் நீண்ட பதிவு மூலமாக விளக்கினார்.

இந்நிலையில் பார்த்திபன் தன் ட்விட்டர் பதிவில், " சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு, திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமும், உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையுமான என் நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன்.அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை கோடிட்ட இடங்களாக மாற்றினேன். யாகாவாராயினும் நா காக்க.....தற்சமயம் உயிர் காக்க - காக்க முக கவசம் அணிக" என்று தெரிவித்துள்ளார்.

திமுக எம் பி செந்தில்குமார் பார்த்திபனை பாஜகவோடு முடிச்சு போட்டு செய்த விமர்சனத்துக்கு எதிர்வினையாக, உதயநிதி பார்த்திபனுக்கு வருத்தம் தெரிவித்து வாட்ஸ் அப்பில் ஒலி செய்தி செய்ய‌, அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.