“வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் மடிக்கணினியுடன் 3 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன்?” என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் பாதுகாப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு, 24 மணி நேரங்களும் வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

இப்படியான சூழலில், கடந்த 6 ஆம் தேதி வாக்குப் பதிவு முடிந்த நிலையில் பண்ருட்டி தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், பண்ருட்டியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை ஒன்றை சுமத்தி உள்ளார். 

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “பண்ருட்டி சட்டமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அண்ணா பொறியியல் கல்லூரியில், மடிக்கணினி அறிவியல் தொடர்புடைய 3 பேருக்கு அனுமதி பாஸ் வழங்கி உள்ளதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

“அந்த வளாகத்தில் தேர்தல் அலுவலர், தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் தவிர யாரும் உள்ளே நுழைய முடியாது. அப்படியிருக்கையில் கைதேர்ந்த 3 கணினி நிபுணர்களை வளாகத்திற்குள் அனுமதித்திருக்கிறார்கள்” என்றும், குற்றம்சாட்டினார்.

“உடனே இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் துறையினரை அழைத்துக் கேட்டால், 'அப்படி ஒரு தகவலே எங்களுக்குத் தெரியாது' என்கிறார்கள்” என்றும் சுட்டிக்காட்டினார். 

மேலும், “இது குறித்து பல்வேறு அதிகாரிகளிடம் நாங்கள் புகார் அளித்தோம் என்றும், இணைய வழி கல்விக்காக மடிக்கணினியுடன் 3 பேருக்கு அனுமதி அளித்ததாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் கூறுகிறார்” என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார். 

“இது தொடர்பாக அனுமதி அளித்தது யார் என தெரிவிக்க வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும்” என்றும், அப்போது வேல்முருகன், வலியுறுத்தினார்.

“ஒரு வேட்பாளரின் அனுமதியில்லாமல் அவர்களை அனுமதித்தது யார் என்று தெரிய வேண்டும் என்றும், இது முழுக்க முழுக்க நான் வெற்றிபெறக் கூடாது என்பதற்காகப் பின்னப்பட்ட சதியாகவே நான் பார்க்கிறேன்” என்றும், அவர் கவலையுடன் குறிப்பிட்டார். 

அத்துடன், “வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார். 

முக்கியமாக, “ஆளுங்கட்சிக்கு ஆதரவான காவல் துறை உயர் அதிகாரிகளும் முறைகேடு செய்வதாகவும்” வேல்முருகன் பகிரங்கமாக அப்போது குற்றச்சாட்டினார்.