தூத்துக்குடி அருகே இளம் பெண் குடும்ப பகை காரணமாக குத்திக்கொல்லப்பட்ட தகவல்கள் வெளியான நிலையில், குடும்ப பகை காரணமாக காதலை கை விட்டதாலேயே அத்தை மகனான காதலன், தன் ஆசை காதலியை குத்திக்கொன்றது தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் 25 வயதான கனகா, அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

அதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த கனகாவின் அத்தை மகனான மாரியப்பன் வீட்டிற்கும், கனகா வீட்டிற்கும் பரம்பரையான இடம் தொடர்பாக, இரு வீட்டாருக்கும் இடையே நீண்ட நாள் பகை இருந்து வந்துள்ளது.

இரு வீட்டிலும் உள்ள பெரியவர்கள் பகைத்துக்கொண்டு இருக்கும் நிலையில், இரு வீட்டில் உள்ள இளசுகள் தங்கள் பங்கிற்கு ரகசியமாகக் காதலித்து வந்துள்ளனர்.

கனகா - மாரியப்பன் இருவரும் சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் காதலர்களாக அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளனர். இந்த காதல் விசயம், கனகாவின் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த கனகாவின் பெற்றோர், தங்களை மகளை அழைத்துக் கண்டித்துள்ளனர். அத்துடன், காதலை கை விடும்படியும் மிரட்டி உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, அத்தை மகன் மாரியப்பன் உடனான காதலை கை விட்டு, கனகா பேசாமல் இருந்து வந்து வந்துள்ளார். இதனால், கடும் கோபம் அடைந்த மாரியப்பன், கனகாவிடம் பேசப் பல முறை முயன்றும், அவர் எதுவும் பேசாமல் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மாரியப்பன், கனகா மீது கொலை வெறியில் இருந்துள்ளார். சம்பவத்தன்று, கனகா, தன்னுடைய மூத்த சகோதரி 26 வயதான பிரியா உடன் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

அப்போது, அங்கு கத்தி உடன் வந்த மாரியப்பன், கனகாவை சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார். அப்போது மாரியப்பனை தடுக்க வந்த கனகாவின் சகோதரி பிரியாவையும், மாரியப்பன் சரமாரியாகக் குத்தி உள்ளார். 

இதில், பலத்த காயம் அடைந்த கனகா, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சகோதரி பிரியா, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்த வந்த ஆத்தூர் போலீசா, கனகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்த போலீசார், கனகா வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற மாரியப்பனை துரத்திச் சென்று பிடித்தனர்.

இதனையடுத்து, மாரியப்பனிடம் விசாரணை நடத்தியதில், அவர் சைக்கோ போல் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, மாரியப்பனிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரியாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான், கனகா - மாரியப்பன் காதல் விவகாரம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால், காதலித்து, பெற்றோரின் வற்புறுத்தலால் காதலை கை விட்ட காதலி கனகாவை, சொந்த அத்தை மகனே கத்தியால் குத்தி கொலை செய்துள்ள காரணமும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.