“காதலி கர்ப்பமானதால் 2 வதாக திருமணம் செய்ய முயன்ற கணவனை, அரிவாளால் மனைவியே வெட்டி கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் மில் காலனியைச் சேர்ந்த 38 வயதான பிரபு - 32 வயதான உமாமகேஸ்வரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். 

கணவன் பிரபு, அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மில்லில், தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில், மதுவுக்கு அடிமையான பிரபு, அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார் என்று கூறப்படுகிறது.

மேலும், கணவன் பிரபுவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதில், அந்த பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.

அதே நேரத்தில், அந்த பெண்ணின் போட்டோவை, பிரபு தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். இதனை, வீட்டில் இருந்த மனைவி உமாமகேஸ்வரி பார்த்துவிட்டு, இது பற்றி தனது கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது, கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், “தனது காதலி தற்போது கர்ப்பமானதால், அவளை என்னால் கைவிட முடியாது என்றும், அவளை நான் 2 வதாக கல்யாணம் செய்யப் போகிறேன்” என்றும், பிரபு உறுதிப்பட தன் மனைவியிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பான சண்டையில், “இஷ்டம் இருந்தால் நீ என்னுடன் வாழ்க்கை நடத்து. இல்லையென்றால், நீ செல்லலாம்” என்றும், அவர் கூறியதாகத் தெரிகிறது. இதனால், கணவன் - மனைவிக்கு இடையே கடும் சண்டை நடந்துள்ளது.

அப்போது, கடும் ஆத்திரமடைந்த மனைவி உமாமகேஸ்வரி, வீட்டில் இருந்த அரிவாளால் தனது கணவனை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரபு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

அதன் பிறகு, துளியும் கவலைப்படாத மனைவி உமாமகேஸ்வரி, கணவனை வெட்டி சாய்த்த அரிவாளுடன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், அந்த அரிவாளைப் பறிமுதல் செய்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், 

இதனிடையே, காதலி கர்ப்பமானதால் 2 வதாக திருமணம் செய்ய முயன்ற கணவனை, அரிவாளால் மனைவியே வெட்டி கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.