தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ள நிலையில், 74 வாக்கு எண்ணும் மையங்களில் 31,245 அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவானது கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. 

இந்த 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி மற்றும் 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவி, 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இந்த தேர்தலில் 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில் 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலையில் பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என்று மொத்தமாக 7 முனை போட்டிகள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில் தான், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது எண்ணப்பட்டு வரும் இந்த வாக்கு எண்ணிக்கை முடிவினை காலை 8 மணிக்கு மேல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரியான https//tnsec.tn.nic.in இல் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று வாக்கு எண்ணிக்கையானது பல இடங்களில் தாமதமாக தொடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

அதன் படி குன்றத்தூர், மரக்காணம், காட்பாடி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 9.15 மணி வரை தொடங்கப்படவில்லை என்றே தகவல்கள் வந்தன. 

அங்கு, எந்த அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சமூக இடைவெளி இல்லாமல் நிற்க வேண்டியுள்ளதாகவும் முகவர்கள் புகார்கள் கூறியுள்ளனர்.

இதனால், மரக்காணம் வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறையினருக்கும், முகவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது போக போக கைகலப்பில் முடிந்தது. இதனால், வாக்கு எண்ணும் பணியானது சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

அதே போல், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்த காரணத்தினால் சுத்தியல் மூலம் பூட்டு உடைத்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் வளாகத்தில் கம்பி வலைகள், மரத்தால் ஆன தடுப்புகளுடன் மேஜைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் இடங்களில் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் கிட்டதட்ட 6,228 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, திண்டுக்கல் நிலக்கோட்டை கவுன்சிலர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.

அதே போல், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி அங்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.