திருச்சி அருகே 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமியின் மகள் 14 வயதான கங்கா தேவி, அந்த பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இதனிடையே, நேற்று மதியத்திற்குப் பிறகு கங்கா தேவி, தன் சக தோழிகளிடம் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். பின்னர், வீடு திரும்பிய அந்த சிறுமி, வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள முள் காட்டில் கொட்டுவதற்காக சென்றிருக்கிறார். அதன் பிறகு, அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. 

இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் உறவினர்களும் சேர்ந்து சிறுமியை அந்த ஊர் முழுக்க தேடி வந்தனர். அந்த பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் சிறுமியைத் தேடியும், அவர் கிடைக்க வில்லை. 

மேலும், குப்பை கொட்டச் சென்ற முள்காடு அமைந்துள்ள பகுதியில், சந்தேகத்தின் பேரில், சிறுமி அந்த பகுதியில் சென்று தேடி உள்ளனர். அங்கு, உடல் கருகிய நிலையில், சிறுமி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அங்கு, மர்ம நபர்கள் சிலர், சிறுமி மீது மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியது தெரியவந்தது.

இதனைப் பார்த்த சிறுமியின் பெற்றோர், அலறி அடித்துக்கொண்டு, அதே இடத்தில் கண்ணீரை கொட்டித் தீர்த்து அழுது புரண்டனர். இந்த தகவல் குறித்து விரைந்து வந்த போலீசார், சிறுமியின் எரிந்த உடலை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்போது, சிறுமி அணிந்திருந்த ஆடைகள் முற்றிலுமாக கிழிந்து இருந்தது. குறிப்பாக, சிறுமியின் இடுப்புக்கு மேல் முழுவதும் எரிந்து போய் இருந்தது. இதனால், சிறுமி எப்படிப்பட்ட வன்கொடுமைகளைச் சந்தித்துக் கொல்லப்பட்டு இருக்கிறார் என்பதை உணர்ந்து, சிறுமியின் உடலை போலீசார் மீட்க முயன்றனர்.

ஆனால், கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, சிறுமை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை உடனடியாக கைது செய்யும் வரை, உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறி, மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், சிறுமியை மீட்க வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீஸ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, சிறுமியை நாசம் செய்த மர்ம நபர்களை விரைவில் கண்டிப்பாகக் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனால், சற்று சமாதானம் அடைந்த பொதுமக்கள், சிறுமியின் உடலை எடுத்துச் செல்ல அனுமதித்தனர். பின்னர், போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்துப் பேசிய போலீசார், “சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது தெரிய வரும்” என்றும் கூறினர்.

அத்துடன், “இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், கண்டிப்பாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், போலீசார் உறுதிப்படத் தெரிவித்தனர்.

எனினும், அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக அளவிலான போலீசார், அந்த பகுதி முழுவதும் குவிக்கப்பட்டனர். 

குறிப்பாக, சிறுமி எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாவட்ட எஸ்.பி. ஜியா உல்ஹக் தலைமையில் 11 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், சோமரசம் பேட்டை காவல் நிலையத்தில் வைத்து 2 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். தற்போது, திருச்சி அருகே மற்றொரு மாணவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.