திருச்சி அருகே மகளை திருமணம் செய்யத் திட்டம் போட்ட தந்தையை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

திருச்சி விமான நிலையம் பகுதியில் வசித்து வரும் ராணி என்ற பெண்ணிற்குக் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நிலையில், இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்கள் பிறந்தனர்.

இதனையடுத்து, அதாவது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராணியின் கணவர் திடீரென்று உயிரிழந்தார். இதனால், தனது 4 குழந்தைகளையும் காப்பாற்ற ராணி போராடி வந்தார். 

அதே நேரத்தில் கணவனை இழந்து தவித்து வந்த ராணி, கணவன் இறந்த சில ஆண்டுகள் கழித்து வெங்கடேஷ் என்பவரை 2 வதாக திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் பிறந்தன.

மேலும், ராணியின் முதல் கணவருக்குப் பிறந்த இரு பெண் பிள்ளைகள் உட்பட அனைவரும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ராணியின் முதல் கணவருக்குப் பிறந்த மகள் ஒருவர் மீது, தந்தை வெங்கடேஷ் சபலப்பட்டு இருக்கிறார்.

அத்துடன், அந்த மகளை தனக்கே திருமணம் செய்து வைக்கும்படி, தன் மனைவி ராணியிடம் அவர் தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருந்துள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த ராணியும், அவரது மகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்படியாகத் தினமும் மகளைத் திருமணம் செய்து வைக்கச் சொல்லி, மனைவி ராணியிடம் அவர் தகராறு செய்து வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில், மகளைத் திருமணம் செய்து வைக்காத கோபத்தில், கிரிக்கெட் மட்டையால் சம்மந்தப்பட்ட அந்த இளம் பெண்ணை, தந்தை வெங்கடேஷ் தாக்கி உள்ளார். இதில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், ஆத்திரமடைந்த மனைவி ராணி, தன் 2 வது கணவன் வெங்கடேஷ் மீது, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அதிரடியாக வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மகள் முறையில் இருக்கும் இளம் பெண்ணை, தந்தை முறையில் இருக்கும் ஒருவர் திருமணம் செய்து வைக்கச் சொல்லித் தொடர்ந்து திட்டம்போட்டு மிரட்டி வந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.