திருச்சியில் “எனக்கும் - பெரம்பலூர் பெண்ணுக்கும் தொடர்பு இருந்தது என்றும், அதே நேரத்தில் என் மனைவிக்கும் அவரது உறவினருக்கும் தொடர்பு இருந்ததை நான் நேரில் பார்த்ததால், என் மனைவி - மாமியாரை நான் கொன்றுவிட்டேன் என்று கைதான கணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெரம்பலூரை சேர்ந்தவர் 35 வயதான உலகநாதன் என்பவருக்கு பவித்ரா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தற்போது அவர்களுக்கு 3 வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. 

திருமணத்திற்குப் பிறகு, சில ஆண்டுகள் மட்டும் சொந்த ஊரில் இருந்த அந்த தம்பதியினர், கடந்த ஆண்டு உலகநாதன் தனது மனைவி மற்றும் மகளுடன் திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள நாயக்கர் தெருவில் ஒத்திக்கு வீடு பார்த்துக் குடி இருந்து வந்தார். 

அப்போது, உலகநாதனுக்கு பெரம்பலூரில் உள்ள ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால்,  பெரம்பலூர் பெண்ணுடன் உலகநாதன் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக, அவர் வீட்டையும், தன் மனைவியையும் கவனிக்கத் தவறியதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில், உலகநாதனின் மனைவி பவித்ராவுக்கு, அவரது உறவினர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர்கள் அடிக்கடி தனிமையில் பேசி வந்தனர். இந்த விசயம், உலகநாதனுக்கு தெரிய வந்த நிலையில், மனைவியிடம் இது குறித்து விசாரித்து உள்ளார். இதனால், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, மனைவி பவித்ரா அவரது உறவினர் ஒருவருடன் ஒன்றாகத் தனியாக இருப்பதைப் பார்த்து உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த உலகநாதன், தன் மனைவியை கொன்று விட வேண்டும் என்று திட்டமிட்டு வந்தார்.

அதன்படி, மனைவியை கொலை செய்வதற்காக, ஒரு பெரிய வாள் ஒன்றை பணம் கொடுத்து வாங்கி, தன் வீட்டில் மறைத்து வைத்திருந்து உள்ளார். 

அந்த நேரம் பார்த்து, திருச்சியில் இருக்கும் தன் மகளையும், தன் பேத்தியைப் பார்ப்பதற்காகக் கடந்த வாரம் பவித்ராவின் தாயார் கலைச்செல்வி திருச்சிக்கு மகள் வீட்டுக்கு வந்து தங்கி உள்ளார். ஆனால், மாமியார் ஊரிலிருந்து வந்திருக்கிறாரே என்றெல்லாம் உலகநாதன் துளியும் கவலைப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணி அளவில் மனைவி மாமியார் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து மனைவி மற்றும் மாமியார் இருவரையும் தனித்தனியாக வாயை பொத்தி கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, அதிகாலை நேரத்தில் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த தன் 3 வயது குழந்தையைத் தூக்கிக்கொண்டு நண்பர்களை வர வைத்து, அவர்களுடன் காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். 

இதனையடுத்து, மறு நாள் காலையில் அக்கம் பக்கத்தினர் கூறிய தகவல் படி விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்து உள்ளனர். அப்போது, அதிகாலை நேரத்தில் உலகநாதன் தன் மகளை தூக்கிக்கொண்டு காரில் ஏறிச் சென்றதாகக் கூறியுள்ளனர்.

இதனால், உலகநாதனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் உலகநாதன் சரணடைந்தார். அதன் தொடர்ச்சியாக போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, மனைவியின் கள்ளக் காதல் விசயம் தெரிய வந்தது. இதனையடுத்து, உலகநாதனை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.