மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மத்திய அரசுடனான 11ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் குடியரசு தினமான இன்று  3 லட்சம் டிராக்டர்களில்‘கிசான் காந்தந்திர அணிவகுப்பு’ என்கிற பெயரில் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக முன்னரே அறிவித்து இருந்தனர்.


நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இன்று டிராக்டர் பேரணி  நடத்தப்படுவதாக விவசாய அமைப்புகள் அறிவித்திருந்தார்கள். அதன்படி இன்று சிங்கு எல்லையில் இருந்து  50,000 டிராக்டர்களில்  மாபெரும் பேரணி தொடங்கியது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தி வந்தனர். இதனால் டெல்லியின் சிங்கு எல்லையில் பெரும் பதற்றம் நிலவியது.


டெல்லியில் 12 மணிக்கும் மேல் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 12 மணிக்கு முன்னரே பேரணி தொடங்கியதால், பேரணி நடத்திய  விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடியும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். 

விவசாயிகள் அமைதியாக பேரணி நடத்தும்போது, இடையில் காவல்துறை வந்து தாக்குதல் நடத்தி கலவரமாக மாற்றுகிறார்கள் என விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். 


இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாய சங்கம் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தது. ஆனால் தமிழகத்தில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. தடையை மீறி விவசாயிகள் பேரணி நடத்தியதால் , தமிழக காவல்துறையினர் விவசாயிகள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் பேரணியை கலைத்தனர். 


திருச்சி, கடலூர், தஞ்சை மாவட்டங்களில் டிராக்டர்,  மாட்டு வண்டி மற்றும் இருசக்கர வாகனத்தில் பேரணியாக செல்ல முயன்றவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர்.