சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு நடைபெறும் என்று வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Tamil Nadu shops shutdown due to police lockup death

பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களைக் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர். 

இதனையடுத்து, நேற்றிரவு பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இன்று காலை தந்தை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து சிறையிலேயே உயிரிழந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. 

இதனால், ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள் சாத்தான்குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார். 

இதனைத்தொடர்ந்து, தந்தை - மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்து, தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் உறுதி அளித்தார்.

மேலும், கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மரணம் தொடர்பாகத் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், சிறைத்துறை ஏடிஜிபி ஆகியோர், இந்த விவகாரத்தில் 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சிறையில் தந்தை, மகன் சந்தேகமான முறையில் மரணமடைந்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக” கூறியுள்ளார். “பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், தந்தை, மகன் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், “தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தை, கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். 

Tamil Nadu shops shutdown due to police lockup death

இந்த பிரச்சனையைக் கையில் எடுத்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்கம், “கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகத் தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், “கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதியும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்” என்றும், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால், கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டு, பகுதி நேரம் மட்டுமே திறக்கப்படும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள லாக்கப் டெத்தால், தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.