தமிழ்நாட்டில் 3 வகையாக பிரிக்கப்பட்ட புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அதே நேரத்தில் கொரோனா மேலும் பரவாமல் தடுக்கும் விதமாகவும்  ஏற்கனவே உள்ள ஊரடங்கை மேலும் ஒரு சில தளர்வுகளோடு வரும் 28 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன் படி, தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில், 3 வகையாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

முதல் வகை

தமிழக அரசு அறிவித்து உள்ள முதல் வகையில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன.

இந்த முதல் வகையில், இடம் பெற்றுள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

2 வது வகை

இந்த 2 வது வகையில் தர்மபுரி, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன.

இந்த 2 வகையில் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாகச் செயல்பாடுகளுக்கும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

3 ஆம் வகை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மட்டுமே இதில் இடம் பெற்று உள்ளன.

இந்த 3 வகையில், குறிப்பிட்ட இந்த 4 மாவட்டங்களுக்கும் கிட்டதட்ட முழுமையான தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.

அதன் படி, இந்த 4 மாவட்டங்களுக்கும் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய தேவைகள்

- அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

- இதர அரசு அலுவலகங்கள், 50  சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- அனைத்து தனியார் நிறுவனங்கள், 33 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

- மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

- அதே போல், மளிகை, பலசரக்குகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம், பூ உள்ளிட்டவை விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

- உணவகங்கள், பேக்கரிகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டு உள்ளது. 

- சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

- அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. 

- விளையாட்டுப் பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதிக்கப்பட்டு உள்ளது.

- குறிப்பாக. பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது.