சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் நசீமா மீது மனித உரிமை நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், 'கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நடந்தது என்ன?' என்பது குறித்து, சட்டக் கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம் பேசி உள்ளார்.

அதாவது, கடந்த ஜனவரி 14 ஆம் தேதி அன்று, சென்னை வியாசர்பாடி புது நகரை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் என்பவர், “முகக் கவசம் அணியவில்லை” என்று கூறி, போலீசார் அவருக்கு அபராதம் விதித்தனர்.

அப்போது, அந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம், அந்த அபராத தொகையை போலீசாரிடம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக, அங்கு இருந்த சக போலீசாரான உத்தரகுமாரை தாக்கியதாகவும், போலீசார் தரப்பில் புதிய குற்றச்சாட்டது.

இப்படியான குற்றச்சாட்டுக்கள் சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் மீது சுமத்தப்பட்டதை அடுத்து, இந்த குற்றச்சாட்டில் மாணவர் அப்துல் ரஹீமை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

அதன்பின்னர், கைது செய்யப்பட்ட மாணவன் அப்துல் ரஹீமை, போலீசார் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று, அவரை மிக கடுமையாக தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

சட்டத்தைக் காக்க வேண்டிய போலீசாரே, இப்படி சட்டத்தை மீறி, மனித் தன்மையற்று நடந்துகொண்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த வீடியோவைப் பார்த்த பொது மக்கள் பலரும், போலீசாருக்கு எதிராக மிக கடுமையாக வசைப்பாடத் தொடங்கி, தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இது, ஒட்டுமொத்த போலீசாருக்கும் கடுமையான அவப் பெயரை ஏற்படுத்தியது.

அத்துடன், “ஒரு மாணவனையே போலீசார் இப்படி துன்புறுத்துகிறார் என்றால், மற்றவர்களை போலீசார் எப்படி நடத்துவார்கள்?” என்கிற விமர்சன குரல்களும் போலீசாருக்கு எதிராக எழுந்த நிலையில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் நசீமா தலைமையிலான போலீசார் மீது தற்போது மனித உரிமை தொடர்பாகவும் கருத்துக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், போலீசாரால் சட்டக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், முதலில் தலைமைக் காவலர் பூமிநாதன் மற்றும் காவலர் உத்தர குமார் ஆகிய இருவர் மட்டுமே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், மற்ற போலீசார் இந்த சம்பத்தில் தப்பித்துக்கொண்டனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் நசீமா, ராஜன் உள்ளிட்ட 9 பேர் மீது முன்னதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் நசீமா தலைமையிலான போலீசார் மீது தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர் நசீமா தலைமையிலான போலீசார் மீது  மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து உள்ளது

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம், “கடந்த ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் அன்று, மெடிக்கலுக்கு வேலைக்கு போயிட்டு நைட் 11 மணி அளவில் நான் வீட்டுக்கு போய்கொண்டு இருந்தேன். எப்போதும் போல மாஸ்க் போட்டுக்கொண்டு தான், நான் சைக்கிள்ள போயிட்டு இருந்தேன். 

அப்போது, அந்த வழியில் இருந்து போலீஸ்காரங்க சிலர், என்னோட சைக்கிளை மறிச்சு ‘நீ இப்போ எங்களை பார்த்துட்டுதான் மாஸ்க் எடுத்து போட்டிருக்க. முறையாக மாஸ்க் போடாததுனால, அபராதம் கட்டிட்டு போ’னு சொல்லி, 1,500 ரூபாய் அபராதம் கேட்டாங்க. எனக்கு ஒரு நாளுக்கு 200 ரூபாய் சம்பளம் கிடைக்குறதே பெரிய விஷயம். 

அப்படியிருக்கும் போது, நான் எந்த தப்பும் செய்யாம ஏன் 1,500 ரூபாயை கொடுக்கனும்னு நினைச்சு, என் தரப்பு கேள்வியை நான் அவர்களிடம் கேட்டேன்.

ஆனால், நான் கேள்வி கேட்டது அவர்களுக்கு பிடிக்கல. ‘எங்ககிட்டேயே சட்டம் பேசுறினு’ அவுங்க இன்னும் கோவமா பேசுனுங்கா. 

அப்ப நான், “நிஜமாவே நான் சட்டக்கல்லூரி மாணவன்தான் சார்னு சொன்னேன். ஆனால், அதுக்குள்ள என்னைய அவுங்க அடிக்க வந்துட்டாங்க. நான் என்னை தற்காத்துக்க, அவங்க அடிச்சதை தடுத்தேன். ஆனால், அதை தப்பா புரிஞ்சுகிட்டு, இன்னும் அடிச்சுகிட்டாங்க. அங்க இருந்து என்னையை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாங்க. அங்க இன்னும் கடுமையா அடிச்சாங்க.

காவல் நிலையத்தில் இருந்த ஒரு பி.சி, நசீமா மேம், பூமிநாதன் சார் என்று, அந்த காவல் நிலையத்தில் இருந்த ஒவ்வொருத்தரும் வரிசையா வந்து வந்து அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. 

குறிப்பாக, வரிசையா மாறி மாறி அவங்களுக்குள்ள பேசி வச்சு, என்னைய அடிச்சாங்க. 

கிட்டத்தட்ட அன்னைக்கு நைட் 11 மணிக்கு தொடங்கி, மறு நாள் அதிகாலை வரைக்கும் தொடர்ந்து ஒருத்தர் ஒருத்தரா ஷிஃப்ட் போட்டு என்னைய ரொம்ப கொடூரமா தாக்கினாங்க. 

காலையில விடிஞ்சதும், பக்கத்துல இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போய் தையல் போட்டு விட்டாங்க. 

திரும்பி வந்தபிறகு, மறுபடியும் ஸ்டேஷன்குள்ள உட்கார வச்சு என்னைய தொடர்ந்து கொடுமைபடுத்தினாங்க. அதுக்குப் பிறகு தான், ஸ்டேஷன்ல இருந்து எக்மோர் நீதிமன்றத்துக்கு என்னையை அழைச்சிட்டு போனாங்க. 

அங்கே இருந்த நீதிபதிகிட்ட எனக்கு நடந்த கொடுமையை சொன்னேன். ஆனால், அவரும் நான் சொன்னதை சரியா கேட்கலை. நீதிபதி, ஏதோ எழுதுகிட்டே இருந்துட்டு, 15 நாள் ரிமேன்ட்னு சொல்லி தீர்ப்பு எழுதிட்டார். என்னால ரொம்ப முடியலைன்னு சொன்னதால, மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போனாங்க.

கிட்டத்தட்ட ஒருவாரத்துக்கு என்னால எதும் பண்ண முடியலை. இயல்பா சாப்பிடக்கூட முடியல. அவ்வளவு வலி. அதனால தான் மனித உரிமை ஆணையத்து கிட்ட முறையிட்டேன். அவங்ககிட்ட நடந்த எல்லாத்தையும் சொன்னேன்.

நான் எந்த தப்புமே பண்ணல. ஆனா, இப்போ நீதிமன்றம், என்மேல போடப்பட்ட வழக்கையெல்லாம், ஆல்டெர் பண்ணி என்னை பெயில்ல வெளியே அனுப்பிருக்காங்க. என்னால நீதிமன்றத்தை எதிர்த்து எதுவுமே பண்ண முடியலை. என்னை அடிச்ச போலீசாஸ்காரங்களையும் எதிர்த்து பேச முடியல. நான் இங்க கேட்குறது, நீதி மட்டும் தான். தப்பே செய்யாம, என் மேல வழக்கு பதிஞ்சு, என் வாழ்க்கையையே நான் இன்னக்கி இழந்துட்டு நிக்கிறேன்.

இப்பக்கூட இந்த விஷயத்தை நான் பெருசுப்படுத்தல. நான் மனித உரிமை கமிஷன்கிட்ட நியாயமா போய் கோரிக்கை வைச்சேன். அடுத்து என்ன செய்றதுன்னே எனக்கு தெரியலை” என்று, மிகவும் வருத்தடுத்துடன் பேசினார்.