இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவத் தொடங்கியதையடுத்து, மார்ச் 25ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து என அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, மத்திய அரசு, அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி அளித்து நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

நாடு முழுவதும் அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்த போதிலும், தமிழகத்தில் அந்த அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், அக்டோபர் இறுதியில் திரையரங்கு உரிமையாளர்களின் தொடர் கோரிக்கையால், நவம்பர் 10ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு தமிழக உத்தரவிட்டது. 7 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படுவதால் முதலில் என்னென்ன படங்கள் தியேட்டருக்கு வருகின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், திரையரங்குகளில் என்ன மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி தமிழக அரசு இன்று (நவம்பர் 3) வெளியிட்டுள்ளது.

அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

* திரையரங்க வளாகத்திற்குள் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

* முககவசம் அணியாதவர்களை திரையரங்கினுள் அனுமதிக்கக்கூடாது.

* திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்

* திரையரங்குக்கு வெளியேயும், பொது இடங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

* திரையரங்கின் நுழைவாயிலில் மக்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்

* பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் வரும் வகையில் குறியீடுகள் போட வேண்டும்.

* திரைப்படத்தின் இடைவேளையின்போது மக்கள் வெளியே வருவதை தவிர்க்க ஊக்குவிக்க வேண்டும்.

* ஒவ்வொரு திரைப்படக் காட்சிக்கும் இடையே போதுமான கால இடைவெளி இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திரைப்படங்களை திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதை வழக்கமாகக்கொண்ட சினிமா ரசிகர்களுக்கு தமிழக அரசின் இந்த அறிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளை திறப்பது என்ற தமிழக அரசின் அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என பலருக்கும் ஒரு நிம்மதியை அளித்துள்ளது.

அதே நேரத்தில் திரையரங்குகள் திறக்கப்படும்போது எவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் என்.வெங்கடேஷ், ஊடகங்களிடம் சமீபத்தில் கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலையான வழிகாட்டுதல்கலை பின்பற்றும் என்று கூறினார். மேலும், திரையரங்கில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமான ஹேண்ட் சானிடைசர், பணமில்லா பரிவர்த்தனைகள் போன்ற விதிமுறைகளை கடைபிடிப்போம்” என்று கூறினார்.

தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படுவது மட்டுமல்லாமல், நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக் காலமாக இருப்பதால் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்டமான காலம் ஆகும்.

தீபாவளி பண்டிகை காலத்தில், வழக்கமாக குறைந்தபட்சம் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வசுலில் போட்டியில் இருக்கும். கடந்த ஆண்டு, விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி வசூலைக் குவித்தன. ஆனால், பொது முடக்கத்திற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதால் இந்த தீபாவளிப் பண்டிகைக்கு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் வெளியாகாது என்று தெரிகிறது.