தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

பாஜகவினரின் இந்த வேல் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அவர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தமிழக டிஜிபி, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை இன்று (நவம்பர் 5) விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும் நாள்களில் கொரோனாவின் 2 வது, 3 வது அலை தாக்கம் தெரியக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், இந்த நிராகரிப்பை செய்வதாக அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற அடுத்தடுத்த கட்ட வழக்கு விசாரணையில், வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம் என்றும், மாநில அரசு இரு விண்ணப்பங்கள் மீதும் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மேலும் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு மீதும், தடை கோரிய மனு மீதும் அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். இதனைத்தொடர்ந்து தடை கோரிய இரு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. 

வழக்கின் முடிவு, தங்களுக்கு சாதகமாக வராதத்தை தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் வேல் யாத்திரைக்கு  தமிழக அரசு அனுமதி மறுத்தது குறித்து பாஜக தலைவர் எல்.முருகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படாதது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் (நவம்பர் 4), திமுக மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி ``வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்கும் பாஜக, தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?” என்று பதிவிட்டிருந்தார்.

மற்றொரு புரம், நேற்று முன்தினம் (நவம்பர் 3) செய்தியாளர்கள் மத்தியில் பேசிய திருமாவளவன், ``பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.  அப்படி செய்யவில்லை என்றால் அதிமுக அரசை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள். அதேபோன்று  பாஜகவினர் வேல் யாத்திரை ஒரு அரசியல் நாடகம். வன்முறையை தூண்டுவதற்கு அது வழிவகுக்கும்" என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இப்படியாக எதிர்க்கட்சிகள் மட்டுமே வேல் யாத்திரையை எதிர்த்து வந்த நிலையில், தற்போது ஆளுங்கட்சியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது, பாஜகவினரை ஏமாற்றத்தில் தள்ளியிருக்கிறது!