கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் நிலையில், பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கூறி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்தனர். மாணவர்கள், தங்கள் மனுவில், யு.ஜி.சி வழிகாட்டுதல்களை தன்னிச்சையாக இருப்பதாகவும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வுகளுக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவதாகவும் கூறினர்.

இதனிடையேதான், பள்ளிகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதே போல, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு அடுத்த பருவம் தொடங்கும்போது நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. எனினும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த காரணத்தால், கல்லூரிகள் திறப்பு தள்ளி போய் கொண்டே வந்தது. அத்துடன், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், இதுதொடர்பாக ஆராய உயர்மட்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது.

அதனைத்தொடர்ந்து, இறுதி பருவம் தவிர பிற பருவத்திலுள்ள மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், உயர்கல்வித்துறை ஜூலை 27ஆம் தேதி விரிவான வழிகாட்டுதல்களுடன் அரசாணையை பிறப்பித்தது.

மேலும், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின்பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்அடிப்படையில், இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கும் யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதேபோல அரியர் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் இறுதி பருவ தேர்வை தவிர மற்ற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இறுதி பருவ தேர்வுக்கும் விலக்கு அளிக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு மாணவர்களிடையே மீண்டும் எழுந்துள்ளது. ஏற்கெனவே இதுதொடர்பாக, தேர்வு நடத்தும் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். மாணவர்கள், தங்கள் மனுவில், யு.ஜி.சி வழிகாட்டுதல்களை தன்னிச்சையாக இருப்பதாகவும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வுகளுக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவதாகவும் அவர்கள் கூறினர்.

இவ்வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யும்படி யுஜிசிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்த விசாரனையின் முடிவில் `இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யம் திட்டம் இல்லை என்றும், அனைத்து பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 2020 இறுதிக்குள் கடைசி செமஸ்டர் அல்லது இறுதி ஆண்டு தேர்வை நடத்த வேண்டும்' என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் இந்த முறையில் மாற்றம் வருமா என மாணவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.