தமிழகத்தில் புதிதாக 26 தொழில் திட்டங்களுக்கு, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் குழுக் கூட்டத்தில், தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்கவும், ஒரு நாட்டில் இருந்து வெளியேறும் நிறுவனத்தை தமிழகத்திற்கு  கொண்டுவரவும், புதிய முதலீடுகளை அனுமதிக்கவும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது.

இந்த உயர்மட்டக்குழு மாதந்தோறும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல், ஒற்றைச் சாளர  அனுமதிகளுக்கான 3-வது உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.25,213 கோடி அளவிற்கான தொழில் முதலீடுகள் செயல்பாட்டிற்கு வந்தபின் சுமார் 49,003 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோவை,  பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENES TEXTILE MILLS (RAMRAJ) ஆடைகள், துணிகள் உற்பத்தி திட்டம், MOBIS INDIA LTD மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. 2-வது உயர்மட்டக்குழு கூட்டங்களில்,  இதுவரை 34 தொழிற் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் ரூ15,000 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 23,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் 55 நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மட்டும் 40,000 கோடி அளவிற்காக முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 74,000-க்கும்   மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர் மட்டக் குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் வணிகம் புரிதல் எளிதாக்குதலை மேலும் மேம்படுத்துவதற்காக, பச்சை நிற வகை தொழிற்சாலைகள் நேரடியாக இயக்குவதற்கான இசைவு வழங்குதல் மற்றும் திட்டம் சாராத பகுதிகளில், நிலப் பயன்பாட்டின் வகைப்பாடு மாற்றம் செய்வதை ஒற்றைச் சாளர முறையில் சேர்த்து வணிக எளிதாக்குதல் விதிகளின் கீழ் கருதப்பட்ட ஒப்புதல் அளிக்கும் வகையில் கொள்கை சீர்திருத்தம் செய்ய உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்தது.

இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில், பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் 25,213 கோடி ரூபாய் அளவிற்கான தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்து, சுமார் 49,003 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்குவது உறுதியாகி உள்ளது.

இன்று அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் முக்கியமான திட்டங்கள் இஎன்இஎஸ் டெக்ஸ்டைல் மில்ஸ் (ராம்ராஜ்) நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் துணிகள் உற்பத்தி திட்டம், மொபிஸ் இந்தியா லிமிடட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், சியோன் இ-எச்டபிளயுஏ ஆட்டோமோடிவ் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் மின்னணு பொருட்கள் உற்பத்தி திட்டம், Kyungshin Industrial Motherson Private Limited நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், எம்ஆர்எஃப்  லிமிடட் நிறுவனத்தின் வாகன டயர்கள் உற்பத்தி திட்டம், வீல்ஸ் இந்தியா லிமிடட்  நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், ஆதெர் எனர்ஜி நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் உற்பத்தி திட்டம், இன்டகிரேட்டட் சென்னை பிசினஸ் பார்க் (டிபி வோர்ல்ட்) நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டம் ஆகியவையாகும்.

இத்திட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

மேலும், இந்தக் கூட்டத்தில், ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்பட்ட தொழில் அனுமதிகள், பெரும் தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்புடைய நிலுவை இனங்கள், தொழில் தோழன் தகவு மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தொடர்புடைய இனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தலைமைச் செயலாளர் க. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.