தமிழகம் முழுவதும் உள்ள “ஊரக சாலைகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு” செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில், “தமிழ் நாடு ஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 4376 கிலோ மீட்டர் சாலை மேம்படுத்தப்படுகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள ஊரக சாலைகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக” தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அத்துடன், “ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள 11 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்தவும்” உத்தரவிடப்பட்டு உள்ளது.

“தமிழக ஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்காக இந்த நிதி ஒதுக்கீடு” செய்யப்பட்டு உள்ளது.

மேலும், “பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும்” தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

அதே போல், சென்னையில் தொடர் மழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சென்னை புற நகர் பகுதிகளான ஊரப்பாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் நீடிக்கும் கனமழையால், அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “செம்பரம்பாக்கம் நீர்த் தேக்கத்தில் இருந்து உபரி நீர் மதகுகள் வழியாக தற்போது வெளியேற்றப்பட மாட்டாது என்றும், செம்பரம்பாக்கம் நீர்த் தேக்கம் அதன் மொத்த உயரம் 24 அடியில் தற்போது 20.8 அடி நீர் இருப்பு உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், “தமிழக அரசின் உரிய அறிவிப்புக்குப் பின்னர் தண்ணீர் திறக்கப்படும்” என்று, பாலாறு வடிநில கண்காணிப்புப் பொறியாளர் முத்தையா செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். 

அத்துடன், சென்னையில் பெய்து வரும் தொடர் கன மழையால், பீர்க்கன்காரணை ஏரியின் கரைகள் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுப்பணித் துறை சார்பில் ஏரியை அழகுப்படுத்தும் விதமாக, கரை ஓரமாக புற்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு பெய்த தொடர் மழையில் இவைகள் அனைத்தும் சரிந்து சாலைகளில் விழுந்து உள்ளது என்றும், பொதுப்பணித் துறையின் அலட்சியம் காரணமாகவே, பொது மக்களின் பல லட்சம் ரூபாய் வரிப்பணம் வீணாகும் என்று” அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால், அங்குள்ள காட்டாங்கொளத்தூரில் உள்ள ஏரி முழு கொள்ளளவையும் எட்டி உள்ளது. இதனால், அந்த ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், காவனூர், செந்தமிழ் நகர் குடியிருப்பு பகுதிகளில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் அவதியுற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

அப்படியாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.